தடுப்பூசி போட்டதால் 3 மாத குழந்தை உயிரிழப்பு ?

தடுப்பூசி போட்டதால் 3 மாத குழந்தை உயிரிழப்பு ?
X

கோவை மாவட்டத்தில் தடுப்பூசி போடப்பட்ட நிலையில் மாலையில் குழந்தை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோயமுத்தூர் மாவட்டம் மசகாளிபாளையம் அருகே உள்ள சுப்பண்ணா வீதியைச் சேர்ந்தவர் பிரசாத் - விஜயலட்சுமி தம்பதியினர். இவர்களுக்கு கிஷான் என்ற 3 மாத ஆண் குழந்தை இருந்தது. இந்நிலையில் அப்பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் சிறப்பு தடுப்பூசி முகாம் போடப்பட்டிருந்தது. அங்கு பிரசாத் - விஜயலட்சுமி தம்பதி தங்களது குழந்தைக்கு தடுப்பூசி போட்டுள்ளனர். காய்ச்சலோ வலியோ இருந்தால் கொடுக்க வேண்டும் எனக் கூறி சொட்டு மருந்தும் மருத்துவர்கள் கொடுத்ததாக கூறப்படுகிறது.

அதன் பின்னர் அவர்கள் வீட்டிற்கு வந்த பிறகும் கூட குழந்தை அழுது கொண்டே இருந்துள்ளது எனவும் பாலும் குடிக்கவில்லை எனத் தெரிகிறது. இதனால் வலி இருக்குமோ என்று எண்ணிய பெற்றோர் குழந்தைக்கு மருத்துவர் கொடுத்த சொட்டு மருந்து கொடுத்துள்ளனர். இதையடுத்து குழந்தை திடீரென மயங்கி விழுந்துள்ளது. உடனடியாக குழந்தையை பக்கத்தில் இருந்த ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.

அப்போது அங்கிருந்த மருத்துவர்கள் குழந்தை பேச்சு மூச்சு இல்லாமல் இருக்கிறது. உடனடியாக கோயமுத்தூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லுங்கள் எனக் கூறியுள்ளனர். அவ்வாறு கொண்டு செல்லும் வழியில் குழந்தை இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!