கோவையில் இந்து முன்னணி பிரமுகர் வீட்டில் 2 துப்பாக்கிகள் பறிமுதல்
இந்து முன்னணி அமைப்பின் கோவை மாவட்ட துணைத் தலைவர் அயோத்தி ரவி.
கோவை ராமநாதபுரம் அருகேயுள்ள புலியகுளம் மசால் லே-அவுட் பகுதியை சேர்ந்தவர் ரவி என்ற அயோத்தி ரவி. இவர், இந்து முன்னணி அமைப்பின் கோவை மாவட்ட துணைத் தலைவராக பதவி வகித்து வருகிறார். இவரது வீட்டில் உரிய அனுமதியின்றி துப்பாக்கிகள் வைத்திருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதைத்தொடர்ந்து, கோவை போத்தனூர் சரக உதவி ஆணையர் சதீஷ் தலைமையிலான தனிப்படை போலீஸார் மசால் லே அவுட் பகுதியில் உள்ள ரவியின் வீட்டில் இன்று திடீரென அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையின் போது ரவி வீட்டில் இருந்த நிலையில் அவரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.
சோதனையின்போது, ரவியின் வீட்டில் உள்ள பீரோவில் இரண்டு கைத் துப்பாக்கிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை உடனடியாக பறிமுதல் செய்த போலீஸார் இதுதொடர்பாக ரவியிடம் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
விசாரணையின்போது, ரவி பல்வேறு பிரச்சனைகளுக்காக கட்டப்பஞ்சாயத்துகளில் ஈடுபட்டு வந்ததும் அதற்காக துப்பாக்கியை பயன்படுத்தி வந்ததும் தெரிய வந்ததாக போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இரண்டு கை துப்பாக்கிகள் சென்னையில் உள்ள அவரது நண்பர்கள் மூலம் வாங்கப்பட்டதும், அதற்கு எந்தவித அனுமதியும் பெறாமல் மிரட்டலுக்காக இந்த துப்பாக்கிகளை பயன்படுத்தி வந்ததும் அம்பலமானது.
இதைத்தொடர்ந்து, ரவியை போத்தனூர் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்ற போலீஸார் தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தினர். அதன் பிறகு அவரை ராமநாதபுரம் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னையில் யாரிடம் இருந்து துப்பாக்கிகள் வாங்கப்பட்டது? வேறு ஏதேனும் கும்பலுடன் ரவிக்கு தொடர்பு உள்ளதா? என பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக போலீஸார் தெரிவித்து உள்ளனர். கோவையில் இந்து முன்னணி பிரமுகரின் வீட்டில் இருந்து துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் கோவை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu