கோவையில் போலி சான்றிதழ் மூலம் நிலம் விற்பனை.. சார் பதிவாளர் உள்ளிட்ட 11 பேர் மீது வழக்குப் பதிவு...
போலி சான்றிதழ் தயாரித்து நில மோசடியில் ஈடுபட்டதாக கைத செய்யப்பட்ட சண்முகவேல்.
கோவை சீரநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் வருண் பிரகாஷ். இவருக்கு சொந்தமாக கோவை பெரியநாயக்கன்பாளையம் அடுத்த கூடலூர் பகுதியில் சுமார் 21 சென்ட் நிலம் உள்ளது. அவரது தந்தையான கதிர்வேல் மற்றும் அவரது சகோதர சகோதரிகளுக்கு சொந்தமாக அந்தப் பகுதியில் சுமார் இரண்டு ஏக்கர் நிலம் இருந்த நிலையில், கடந்த 2014 ஆம் ஆண்டு செய்யப்பட்ட பாகப்பிரிவினையின் பேரில் கதிர்வேலுக்கு 21 சென்ட் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே கடந்த 2015 ஆம் ஆண்டு கதிர்வேல் உயிரிழக்கவே அவரது வாரிசுகளான மனைவி, இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் என நான்கு பேரும் வாரிசு சான்றிதழ் பெற்றுள்ளனர். கடந்த அக்டோபர் மாதம் வருண் பிரகாஷின் சகோதரிக்கு திருமணம் நிச்சயக்கப்பட்டதால் அவர்கள் தங்களுக்கு சொந்தமான 21 சென்ட் நிலத்தை விற்க முற்பட்டுள்ளனர்.
அப்போது ஏற்கனவே அந்த 21 சென்ட் நிலம் கோவை ஜோதிபுரம் பகுதியை சேர்ந்த விஜயராஜ் என்பவருக்கு கடந்த 2020 ஆம் ஆண்டு பத்திரம் பதிவு செய்து விற்பனை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. இது குறித்து பத்திரப்பதிவு சார்பதிவாளர் அலுவலகத்தில் சென்று விசாரித்த போது சரவணம்பட்டி பகுதியைச் சேர்ந்த அங்குசெல்வம் என்ற நபர் உயிரிழந்த கதிர்வேலின் மகன் என்று போலியாக சான்றிதழ்கள் பெற்று அந்த சான்றிதழ்களை பத்திரப்பதிவாளர் அலுவலகத்தில் வழங்கி அதன் மூலம் நிலத்தை விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட வருண்பிரகாஷ் மேற்கு மண்டல காவல்துறை தலைவர் சுதாகரிடம் புகார் அளித்தார். அவரது உத்தரவின் பேரில், கோவை மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். விசாரணையின்போது, லஞ்ச வழக்கில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட கோவை பெரியநாயக்கன்பாளையம் முன்னாள் சார்பதிவாளர் ராமமூர்த்தி என்பவர் பணியில் இருந்த காலத்தில் சண்முகவேல் என்ற நபர் தனது பெயரை அங்குசெல்வம் என மாற்றி ஓட்டுநர் உரிமம், வருமான வரி அட்டை, ஆதார் அட்டை மற்றும் உயிரிழந்த கதிர்வேலின் இறப்பு சான்றிதழ் ,வாரிசு சான்றிதழ் உள்ளிட்டவற்றை போலியாக தயாரித்து அதன் மூலம் கதிர்வேலுக்கு சொந்தமான 21 சென்ட் நிலத்தை விற்பனை செய்தது தெரியவந்தது.
மேலும், அந்த நிலத்திற்கு அருகில் இருந்த கதிர்வேலின் உடன் பிறந்தவர்களுக்கு சொந்தமான இரண்டு ஏக்கர் நிலத்தில் இருந்து சுமார் 30 அடி ஆழத்திற்கு செம்மண் எடுத்து விற்பனை செய்திருப்பதும் அம்பலமானது. இந்த சூழலில் வருண்பிரகாஷின் புகாரின் அடிப்படையில் கோவை பெரியநாயக்கன்பாளையம் பத்திரப்பதிவு அலுவலக முன்னாள் சார் பதிவாளர் ராமமூர்த்தி உள்ளிட்ட 11 பேர் மீது வழக்கு பதிவு செய்த கோவை மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீஸார் போலி சான்றிதழ்களை தயாரித்து நில மோசடியில் ஈடுபட்ட சண்முகவேலை கைது செய்து நீதிமன்ற உத்தரவின் பேரில் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
கைது செய்யப்பட்டுள்ள மோசடி நபரான சண்முகவேல் கடந்த ஆண்டு கோவை கோவில்பாளையம் பகுதியில் இதேபோன்று போலி சான்றிதழ்கள் தயாரித்து நில மோசடியில் ஈடுபட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு தற்போது பிணையில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu