கோவை நகை வியாபாரியிடம் ரூ 1.27 கோடி கொள்ளை: 12 மணி நேரத்தில் குற்றவாளிகள் கைது
கொள்ளையர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட பணம்
கோவை மாவட்டம், தெலுங்குபாளையத்தில் பிரகாஷ் (44) என்பவர் நகைகளை வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார். இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் வங்கியின் மேலாளர் மூலமாக அறிமுகமான பொள்ளாச்சியைச் சேர்ந்த சின்னகுட்டி என்பவர் பிரகாஷை தொடர்பு கொண்டு தனக்குத் தெரிந்தவர்களிடம் 2000 ரூபாய் நோட்டுகள் அதிகம் இருப்பதாகவும் அதை 500 ரூபாய் நோட்டுகளாக மாற்றிக் கொடுத்தால் 15 சதவீதம் கமிஷன் கொடுப்பதாக கூறியிருக்கிறார்.
அதன்பேரில், கடந்த ஜூன் 10ம் தேதி சின்னக்குட்டி உள்ளிட்ட 6 பேர் பிரகாஷை பொள்ளாச்சியை அடுத்த அம்பராம்பாளையம் பகுதிக்கு பணத்துடன் வரவழைத்து, பிரகாஷின் கவனத்தை திசை திருப்பி காரில் வைத்திருந்த ரூ.1 கோடியே 27 லட்சத்து 500 பணத்தை எடுத்துக் கொண்டு தப்பிக்க முயன்றனர். அப்போது, பிரகாஷ் சத்தம் போடவே, அவரை மிரட்டிவிட்டு பணத்துடன் தப்பிச் சென்று விட்டனர். இது தொடர்பாக ஆனைமலை காவல் நிலையத்தில் பிரகாஷ் புகார் அளித்ததன் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்து பணத்தை மீட்க கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் கீர்த்தி வாசன் தலைமையில் 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இதுகுறித்து மேற்கொண்ட புலன் விசாரணையில் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட சின்னகுட்டி(42), மீனாட்சி(38), பாண்டியன் (52), அழகர்சாமி (45), சௌமியான்(29), கவாஸ்கர்(26) ஆகியோரை தேனி அருகே தனிப்படையினர் கைது செய்தனர்.
கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தங்க நகை வியாபாரி பிரகாசை தொடர்பு கொண்ட இந்த கும்பல் தங்களிடம் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அதிகமாக இருப்பதாகவும், நீங்கள் ரூ 85 லட்சம் கொடுத்தால் ஒரு கோடி ரூபாய் 2000 நோட்டுகளை தருவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளனர். மேலும் அவரை நேரில் சந்தித்து 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் கட்டுக்கட்டாக இருக்கும் வீடியோவையும் காண்பித்தனர்.
இதனை நம்பியே பிரகாஷ் கடந்த 10-ம் தேதி ரூ.1 கோடியே 27 லட்சத்து 500 பணத்துடன் பொள்ளாச்சிக்கு சென்றார். அப்போதுதான் இந்த பணம் பறிப்பு சம்பவம் நடந்தது.
இது தொடர்பாக குற்றவாளிகளை பிடிக்க வால்பாறை சரக டி.எஸ்.பி. கீர்த்தி வாசன் தலைமையில் 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. தனிப்படையினர் குற்றவாளிகள் பயன்படுத்திய செல்போன் எண்ணை வைத்து விசாரித்தனர். விசாரணையில் இந்த கும்பல் மதுரை அருகே உள்ள உசிலம்பட்டியில் பதுங்கி இருந்தது தெரிய வந்தது.
தனிப்படை காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று பெண் உள்பட 6 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் இருந்து ரூ.1 கோடியே 27 லட்சத்து 500 பணம், 2 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டது. சம்பவம் நடை பெற்ற 12 மணி நேரத்தில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
எனவே பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டும். வங்கியிலேயே 2000 ரூபாய் நோட்டுக்களை மாற்ற அரசு உரிய அவகாசம் கொடுத்துள்ளது. வங்கியிலேயே பணத்தை மாற்ற வேண்டும். எனவே இது போன்ற மோசடி நபர்களை நம்பி யாரும் ஏமாற வேண்டாம்.
இந்த பணத்திற்கான உரிய ஆவணங்களை தங்க நகை வியாபாரியிடம் கேட்டுள்ளோம். வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளோம். அவர்கள் ஆவணங்களை சரிபார்த்து நீதிமன்றம் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
தொடர்ந்து குற்றவாளிகளை கைது செய்த தனிப்படை காவல்துறையினரை பாராட்டி பாராட்டு சான்றிதழ் மற்றும் ஊக்க தொகையையும் வழங்கினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu