கோவையில் தடுப்பூசி போடுவது நிறுத்தம்: பொதுமக்கள் ஏமாற்றம்

கோவையில், தடுப்பூசி போடும் பணி மீண்டும் நிறுத்தப்பட்டதால், பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

கோவை மாவட்டம் முழுவதும் 88 ஆரம்ப சுகாதார நிலையங்களில் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன் மத்திய அரசால் 40000 கோவி ஷீல்ட் மற்றும் 8000 கோவாக்சின் தடுப்பூசிகள் என, 48 ஆயிரம் தடுப்பூசிகள் வழங்கப்பட்டன.

இவை, 88 சுகாதார மையங்கள் மற்றும் மாநகராட்சிக்கு உட்பட்ட 5 மண்டலங்களில் 36 பள்ளிகளில் சிறப்பு தடுப்பூசி மையங்கள் வாயிலாக, கடந்த 3 மற்றும் 4ஆம் தேதிகளில், 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு முதல் மற்றும் இரண்டாவது டோஸ் தடுப்பூசியாக செலுத்தப்பட்டது.

தடுப்பூசி மையங்களில் கையிருப்புக்கு ஏற்ப டோக்கன்கள் வழங்கப்பட்டு பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. மாவட்டத்தில் நேற்று முன்தினம் 20,223 தடுப்பூசிகளும், நேற்றைய தினம் 19,125 தடுப்பூசிகளும் என கடந்த இரண்டு நாட்களில் 39 ஆயிரத்து 348 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில் கோவை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் இன்று தடுப்பூசி கையிருப்பு இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, பெரும்பாலான தடுப்பூசி மையங்களில் தடுப்பூசி இல்லை என்ற அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. இதனால் கோவை ராஜவீதி, ராமநாதபுரம், நஞ்சுண்டாபுரம் உள்ளிட்ட இடங்களில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஆர்வத்துடன் வந்த பொதுமக்கள் பலர், ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

Tags

Next Story