கோவையில் கொரோனா அதிகரிப்பு: ஊரடங்கில் மேலும் கட்டுப்பாடுகள் அதிகரிப்பு
பைல் படம்.
கோவையில் ஊரடங்கில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையிலும், தொடர்ந்து கொரோனா தொற்று பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. இதனால் கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், கோவையில் ஊரடங்கில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதித்து மாவட்ட ஆட்சியர் சமீரன் உத்தரவிட்டார்.
கோவை மாவட்டத்தில் உள்ள பால், மருந்தகம், காய்கறி கடைகள், மளிகை கடைகள் உள்ளிட்ட அத்தியாவசிய கடைகள் தவிர மற்ற அனைத்து கடைகள் மற்றும் சந்தைகள் ஞாயிற்றுக்கிழமை இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பன்னடுக்கு வணிக வளாகங்கள், திரையரங்குகள், பூங்காக்கள், சுற்றுலா தலங்கள் ஆகியவை ஞாயிற்றுக்கிழமைகளில் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள அனைத்து வார சந்தைகளுக்கும் ஏற்கனவே விதிக்கப்பட்ட தடை தொடர்கிறது.
அனைத்து உணவகங்கள், அடுமனைகள் ஆகியவை ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சந்தைகளில் மொத்த விற்பனை நிலையங்களுக்கு மட்டும் 50 சதவீத கடைகள் சுழற்சி முறையில் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் உழவர் சந்தைகள் சுழற்சி முறையில் 50 சதவீத கடைகளுடன் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பொள்ளாச்சி மாட்டு சந்தை உள்ளூர் வாடிக்கையாளர்களை கொண்டு இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேசமயம் சந்தைகளில் வெளி மாவட்ட மற்றும் வெளி மாநிலத்தவர்கள் கலந்து கொள்ளாமல் இருப்பதை சார் ஆட்சியர் மற்றும் நகராட்சி ஆணையர் உறுதிப்படுத்த வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் இதுவரை 82 சதவீதத்திற்கு மேல் பொதுமக்களுக்கு முதல் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் வருகின்ற 20 ம் தேதி முதல் அனைத்து வணிக வளாகங்கள், துணிக்கடைகள், நகை கடைகள் உள்ளிட்ட கடைகளில் பணிபுரியும் பணியாளர்கள் கொரோனா தடுப்பூசி முதல் தவணை தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு கட்டுப்பாடுகள் வருகின்ற 17 ம் தேதி முதல் அமலுக்கு வருவதாகவும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொது மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமெனவும் கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu