ஈமு கோழி மோசடி வழக்கில் குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் சிறை: ரூ.2 கோடி அபராதம்

சுசீ ஈமு நிறுவன உரிமையாளர் குருசாமி.
ஈரோடு மாவட்டம், பெருந்துறையை சேர்ந்தவர் குரு என்ற குருசாமி(40). இவர் கடந்த 2010ம் ஆண்டு பெருந்துறையில் சுசி ஈமு பாம்ஸ் பிரவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை தொடங்கினார். இந்த நிறுவனத்தின் மூலம் கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்து, அதனை பிரபல நடிகர்களை கொண்டு ஊடகங்களில் விளம்பரம் செய்தார்.
முதல் திட்டத்தில் ரூ 1.50 லட்சம் பணம் முதலீடு செய்தால் 6 ஈமு கோழி குஞ்சுகள் தீவனம் செட் மருந்து மற்றும் பராமரிப்பு பணமாக மாதம் 6 ஆயிரம் ரூபாயும், வருடம் போனசாக ரூ.20 ஆயிரம் மற்றும் இரண்டு வருடம் கழித்து கட்டிய முழு பணமும் திருப்பி கொடுக்கப்படும் என விளம்பரம் செய்துள்ளார்.
இரண்டாவது திட்டமான விஐபி திட்டத்தில் ரூ 1.50 லட்சம் முதலீடு செய்தால் மாதம் ரூ 7 ஆயிரம் போனசாக வருடத்திற்கு ரூ.30 ஆயிரம் வழங்கப்படும் என்றும், இரண்டு வருடம் கழித்து கட்டிய முழு பணமும் திருப்பி கொடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
இதனை நம்பி கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் நாமக்கல் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 96 பேர் முதலீடு செய்த நிலையில் முதலீட்டாளர்களுக்கு பணத்தை திருப்பிக் கொடுக்காமல் மோசடி செய்துள்ளார். பாதிக்கப்பட்ட நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தைச் சேர்ந்த செல்வம் என்பவர் நாமக்கல் பொருளாதார குற்றப்பிரிவில் கடந்த 2012ம் ஆண்டு புகார் அளித்தார்.
புகாரின் பேரில் நாமக்கல் போலீசார் குருசாமி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த வழக்கு கோவை டான்பிட் நீதிமன்றத்தில் வந்த நிலையில் விசாரணை நிறைவடைந்து இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
சுசீ ஈமு நிறுவன உரிமையாளர் குருசாமிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கிய நீதிபதி ரவி, இரண்டு கோடியே 40 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். மேலும் குருசாமி நீதிமன்றத்தில் ஆஜராகாததால் பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu