கோவையில் தற்கொலை வழக்குகளை குறைக்க நடவடிக்கை: எஸ்பி., பேட்டி

கோவையில் தற்கொலை வழக்குகளை குறைக்க நடவடிக்கை: எஸ்பி., பேட்டி
X

சைபர் கிரைம் விழிப்புணர்வு குறும்படத்தை வெளியிட்ட கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம்.

தற்கொலை எண்ணங்களை தடுக்க மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் 24 மணி நேரம் செயல்பட கூடிய "விடியல்" என்ற ஆலோசனை மையம் துவக்கம்.

தற்கொலை எண்ணங்களை தடுப்பது, மன அழுத்தங்களை போக்குவதற்காக கோவை மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கோவை மாவட்ட காவல்துறை சார்பில் 24 மணி நேரம் செயல்பட கூடிய "விடியல்" என்ற ஆலோசனை மையம் துவங்கப்பட்டுள்ளது. மாவட்ட கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் இதில் கலந்து கொண்டு அம்மையத்தில் பணிபுரிய கூடிய காவலர் ஒருவரை கொண்டு திறந்தார். இது அங்குள்ள அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. அதனை தொடர்ந்து கோவை மாவட்ட சைபர் கிரைம் சார்பில் எடுக்கப்பட்ட குறும்படத்தை வெளியிட்டு ஆலோசனை மையத்தில் பணிபுரிய இருக்கும் மன நல மருத்துவர் ஆலோசகர், காவலர்கள் ஆகியோருக்கு விடியல் என்ற நினைவு பரிசினை வழங்கினார்.

அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம், கோவை மாவட்டத்தில் பதியப்பட்ட இறப்பு வழக்குகளில் தற்கொலைகளே அதிகமாக உள்ளது என தெரிவித்தார். கடந்த ஐந்தரை ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்ட இறப்பு வழக்குகளில் தற்கொலைகளே முக்கியமானதாக உள்ளது. இந்த ஆண்டில் இதுவரை 959 வழக்குகள் பதியப் பட்டது அதில் 480 வழக்குகளுக்கு மேல் தற்கொலைகளே உள்ளன என தெரிவித்தார். அதுமட்டுமின்றி கடந்த இரண்டு வருடங்களில் தான் தற்கொலையின் சதவிகிதம் அதிகரித்துள்ளதாக கூறினார்.

இதற்கான ஆய்வு நடத்தியதில் குடும்ப பிரச்சினையே அதிகப்படியான காரணமாக இருப்பதாக தகவல்கள் வந்துள்ளதாக கூறினார். எனவே இந்த தற்கொலை எண்ணங்களைத் தடுக்கும் விதமாக பல்வேறு உதவிகளை புரியும் விதமாகவும் கோவை மாவட்ட காவல்துறை சார்பில் விடியல் என்ற இருபத்தி நான்கு மணி நேர தொலைபேசி ஆலோசனை மைய சேவையை ஏற்படுத்தி உள்ளதாக கூறினார். இந்த ஆலோசனை மையத்தை 04222300999 எண் மூலம் தொடர்பு கொள்ளலாம் அல்லது 7708100100 என்ற வாட்ஸ்அப் எண் மூலமும் காவல் கட்டுப்பாட்டு அறை எண் 100 மூலமும் தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்தார். இதனை தொடர்புகொண்டு பிரச்சனைகளைக் கூறினால் கட்டுப்பாட்டு அறையில் உள்ள காவலர்கள் தகுந்த ஆலோசர்களை பரிந்துரை செய்வர் என தெரிவித்தார். இந்த ஆலோசனை மையம் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் நடைபெறும் என தெரிவித்தார். மேலும் 50 ஆலோசகர்களை நியமித்து உள்ளதாகவும் தெரிவித்தார்.

Tags

Next Story
டெல்லி டூ அமெரிக்கா அரை மணி நேரத்துலயா? என்னப்பா சொல்ற எலான் மஸ்க்..! | Delhi to America Flight Timings