தேர்தல் அறிவிப்பிற்கு முன்பாக பிப்ரவரி 5ம் தேதி கோவை மாநகராட்சி கூட்டம்
கோவை மாநகராட்சி
மக்களவை தேர்தல் நெருங்கி வருவதால், தேர்தலை சந்திக்க அனைத்து கட்சிகளும் ஆயத்தமாகி வருகின்றன. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின், தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிடும்.அதன் பின், எந்த ஒரு புதிய அறிவிப்போ, அரசு திட்டம் தொடர்பான புதிய ஆணையோ பிறப்பிக்கக் கூடாது.
இந்நிலையில், கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் பிப்ரவரி 5ம் தேதி மாமன்ற சாதாரண கூட்டம் நடைபெற உள்ளது.
கூட்டத்தில் முன்வைக்கப்படும் தீர்மானங்களும், கவுன்சிலர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டு வருகிறது. இதில், 56 தீர்மானங்கள் இடம்பெறும் என தெரிகிறது. ஆழ்குழாய் கிணறு அமைத்தல், பாதாள சாக்கடை குழாய் மாற்றியமைத்தல், பள்ளிகளில் நவீன வகுப்பறைகள், ரோடு உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்கு, அதிக எண்ணிக்கையில் அனுமதி வேண்டப்படுகிறது.
மழைநீர் வடிகால், பூங்காக்களில் மின் விளக்கு, சிறு பாலங்கள், நகர்ப்புற நலவாழ்வு சுகாதார மையத்தில் அபிவிருத்தி பணிகள், ரேஷன் கடை கட்டுதல், கழிப்பறைகள் உள்ளிட்ட பணிகளுக்கு, முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, 24 மணி நேர குடிநீர் திட்டம், குப்பை விஷயத்தில் வார்டுகளில் தலை காட்ட முடியவில்லை என கவுன்சிலர்கள் குமுறி வருகின்றனர். இந்நிலையில் தேர்தல் சமயத்தில் ஏற்படும் அதிருப்தியை தவிர்க்க, பணிகளை விரைந்து முடிக்க, கவுன்சிலர்கள் தீவிரம் காட்டி வருகினறனர்.
கவுன்சிலர்கள் கூறுகையில், 'கடந்த மாதம் மன்ற கூட்டம் நடைபெறவில்லை. எனவே, தேர்தலுக்கு முன்பே வரும் மன்ற கூட்டத்தில் அனைத்துக்கும் அனுமதி வாங்கும் விதமாக, அடிப்படை வசதிகளுக்கு முக்கியத்துவம் அளித்துள்ளோம்.
குறிப்பாக, சாலை அமைத்தல், சீரமைத்தல், தண்ணீர் பிரச்னையை சமாளிக்க, ஆழ்குழாய் அமைக்கவும் தீர்மானங்கள் அதிகம் இடம்பெற்றுள்ளன. ஏற்கனவே துவங்கிய பணிகளை விரைந்து முடிக்கவும், அனுமதி பெற்ற பணிகளை தேர்தலுக்கு முன்பு விரைந்து துவங்கவும், அதிகாரிகளை வலியுறுத்தி வருகிறோம்' என்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu