கோவை நாடாளுமன்ற தொகுதியில் தாமரை மலரும்: வானதி சீனிவாசன் நம்பிக்கை
வானதி சீனிவாசன் வாக்களித்து விட்டு வெளியே வந்த காட்சி.
பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் கோவை டாடாபாத் பகுதியில் உள்ள காமராஜர் மெட்ரிகுலேஷன் பள்ளியில் தனது வாக்கினை இன்று செலுத்தினார். தனது குடும்பத்தினரோடு வாக்குச்சாவடிக்கு வந்தவர், பொதுமக்களோடு சேர்ந்து வரிசையில் நின்று வாக்களித்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வானதி சீனிவாசன் கூறியதாவது:-
'தமிழ்நாட்டில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்கள் 39 பாராளுமன்ற தொகுதிகளிலும் வெற்றி வேட்பாளராக உள்ளனர். கடந்த மூன்று வாரங்களுக்கும் மேலாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் தேர்தல் பிரச்சாரங்களுக்கு சென்று வந்துள்ளோம். இளைஞர்கள், முதியவர்கள், விவசாயிகள், பெண்கள் என அனைவரும் பிரதமர் மோடி மீதான அபிமானத்தை அப்போது வெளிப்படுத்தினர். கடந்த 10 ஆண்டுகால பாஜக ஆட்சியில் செய்த நல்ல செயல்களை அவர்கள் கூறுகின்றனர். தமிழ்நாட்டிலும் நேர்மையான ஊழலற்ற பாஜக ஆட்சி அமைய வேண்டும் என தெரிவித்தனர். இந்த தேர்தல் பிரச்சார பயணம் பாஜகவினருக்கு மிகுந்த உற்சாகத்தை தமிழகத்தில் கொடுத்துள்ளது.
பாரதிய ஜனதா கட்சி ஒரு பகுதியில் மட்டுமே வலுவான கட்சி என்ற கருத்தினை இந்த தேர்தல் முடிவுகள் மாற்றும் என நம்புகிறோம். கிராமங்கள் முதல் நகரப் பகுதிகள் வரை அனைத்து பகுதிகளிலும் பாஜகவிற்கு மிகுந்த ஆதரவு உள்ளது. கோயம்புத்தூர் பாராளுமன்ற தொகுதியை பொறுத்தவரை அனைத்து பகுதிகளிலும் அண்ணாமலை அவர்களுக்கு ஆதரவு உள்ளது. கோயம்புத்தூர் பாராளுமன்ற தொகுதியில் தாமரை மலரும் என நம்பிக்கையாக இருக்கிறோம். அதுவும் சாதாரண வெற்றியாக இல்லாமல் லட்சக்கணக்கான வாக்கு வித்தியாசத்தில் அண்ணாமலை வெற்றி பெறுவார். கோயம்புத்தூர் பாராளுமன்ற தொகுதி பாரம்பரியமாகவே பாஜகவிற்கு ஆதரவு அளிக்கக்கூடிய தொகுதியாக உள்ளது. முந்தைய தேர்தல்களின் அடிப்படையில் பாஜகவிற்கு கணிசமான வாக்கு வங்கி இங்கு உள்ளது. இந்த முறை அது இன்னும் அதிகமாகியுள்ளது. எனவே அண்ணாமலை கட்டாயம் வெற்றி பெறுவார். மோடி அவர்களின் 400க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற வெற்றி வேட்பாளர்களில் அண்ணாமலையும் இருப்பார் என உறுதியாக நம்புகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
கோயம்புத்தூரில் பாஜக வாக்குக்கு பணம் அளிக்கிறது என்ற புகார் குறித்த கேள்விக்கு பதில் அளித்தவர், "ஆலாந்துறை பகுதியில் பூத் ஏஜெண்டுகளுக்காக எங்களது மண்டல் நிர்வாகிகள் கொண்டு சென்ற பணத்தை பிடித்து மக்களுக்கு கொடுக்க எடுத்துச் செல்லப்பட்ட பணம் என பொய்யாக புகார் அளித்துள்ளனர். திமுகவும், அதிமுகவும் வெளிப்படையாக பணம் கொடுத்து வருகிறது. அது குறித்து பல புகார்கள் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆன்லைன் புகார் அளிக்கும் சேவை முற்றிலுமாக முடங்கியுள்ளது. முன்பெல்லாம் திமுக பணம் கொடுப்பதாக பாஜக புகார் அளித்து வந்தது. இந்த முறை திமுகவினர் பணம் கொடுப்பதை மறைப்பதற்காக பாஜக பணம் கொடுப்பதாக பொய் செய்திகளை பரப்பி திசை திருப்பி வருகின்றனர். கோடிக்கணக்கான பணத்தை கொட்டிக் கொடுத்தாலும் கோயம்புத்தூர் மக்கள் இம்முறை தெளிவாக உள்ளனர். கோயம்புத்தூரில் கட்டாயம் தாமரை மலரும்' என்றார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu