பாஜக தேர்தல் அறிக்கை மக்களிடம் வரவேற்பை பெறும் : வானதி சீனிவாசன்
வானதி சீனிவாசன்
பாஜக தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “2024 மக்களவைத் தேர்தலுக்கான பாஜக தேர்தல் அறிக்கையை பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாளில் பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ளார். அடுத்த சில ஆண்டுகளில் இந்தியாவை உலகின் மூன்றாவது பொருளாதார நாடாக்கும் இலக்குடன், இளைஞர்கள், பெண்கள், ஏழைகள், விவசாயிகள் நலனுக்கான பல்வேறு திட்டங்கள் பாஜக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன. 3 கோடி பெண்கள் லட்சாதிபதிகளாக உருவாக்கப்படுவார்கள், ஒரு ரூபாயில் சானிட்டரி நாப்கின், மகளிர் சுய உதவி்க்குழுக்களை மேம்படுத்துதல், பொது இடங்களில் பெண்கள் கழிவறை, காவல் நிலையங்களில் சக்தி டெஸ்க், பணிபுரியும் பெண்களுக்கான விடுதிகள் என பெண்களுக்கான பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இவை பெண்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
உலகின் தொன்மையான செம்மொழியான தமிழ் மொழியை உலகம் முழுவதும் கொண்டுச் செல்ல நடவடிக்கை எடுக்கப்படும். உலகம் முழுவதும் திருவள்ளுவர் பண்பாட்டு மையங்கள் நிறுவப்படும் என்று பாஜக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ்நாட்டு மக்கள் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டிற்கு வெளியே, மற்ற மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும், ஐ.நா., சபை போன்ற உலக அரங்குகளில் தமிழ், தமிழர், தமிழ்நாட்டின் சிறப்புகள் குறித்தும், தமிழின் தொன்மையான இலக்கியங்கள் குறித்தும் தொடர்ந்து பேசிய ஒரே பிரதமர் மோடி மட்டுமே. அதன் தொடர்ச்சியாக தமிழுக்கு மேலும் மகுடம் சூட்டும் அறிவிப்புகள் பாஜக அறிக்கையில் இடம்பெற்றுள்ளது.
கடந்த 10 ஆண்டுகால மோடி ஆட்சியில் வீடுகள்தோறும் குடிநீர், கழிவறை, இலவச சமையல் எரிவாயு இணைப்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்பட்டன. அதன் தொடர்ச்சியாக, 70 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் ஆயுஷ்மான் மருத்துவக் காப்பீடு, திருநங்கைகளுக்கும் ஆயுஷ்மான் மருத்துவக் காப்பீடு, மக்கள் மருந்தகத்தில் 80 சதவீத தள்ளுபடியில் மருந்துகள், அடுத்த 5 ஆண்டுகளில் 3 கோடி குடும்பங்களுக்கு இலவச வீடுகள், முத்ரா கடன் 10 லட்சம் ரூபாயிலிருந்து 20 லட்சம் ரூபாயாக உயர்வு, அடுத்த 5 ஆண்டுகளுக்கு ரேஷனில் இலவச உணவு தானியங்கள் உள்ளிட்ட ஏராளமான மக்கள் நலத் திட்டங்கள் இடம்பெற்றுள்ளன. தேசிய நெடுஞ்சாலைகளில் லாரி ஓட்டுநர்களுக்கு ஓய்வு மையங்கள், காசி விஸ்நாதர் கோயில் போல நாடு முழுவதும் முக்கிய வழிபாட்டுத் தலங்கள் சீரமைப்பு, ஒரே நாடு, ஒரே தேர்தல், பொது சிவில் சட்டம், சுற்றுலா மேம்பாடு, நகர்ப்புற வளர்ச்சிக்கான பல்வேறு திட்டங்கள் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன. நாட்டின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்தத் தேர்தல் அறிக்கை மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெறும். மக்கள் பாஜகவுக்கு 400க்கும் அதிகமான எம்.பி.க்களுடன் வரலாறு காணாத வெற்றியை வழங்குவார்கள்” எனத் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu