கோவையில் உயர்நீதிமன்ற தடையை மீறி 'பஸ் டே' கொண்டாடிய மாணவர்கள்

கோவையில் உயர்நீதிமன்ற  தடையை மீறி பஸ் டே கொண்டாடிய மாணவர்கள்
X
பஸ் டே கொண்டாட்டத்திற்காக அலங்கரிக்கப்பட்ட பஸ்.
கோவையில் உயர்நீதிமன்ற தடையை மீறி 'பஸ் டே' கொண்டாடிய மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.

பொதுவாக பஸ் டே என்றாலே கல்லூரி மாணவர்களுக்கு தனி உற்சாகம் தான். அந்த நாளில் பேருந்துகளை பூக்கள் மற்றும் பலூன்களால் அழகாக அலங்கரிப்பார்கள். முன்பக்கம் மாலைகளை தொங்கவிடுவார்கள். பேருந்தில் ஏறி தாரைப் தப்பட்டை முழுங்க, ஆக்ரோஷமாக கத்துவார்கள். பேருந்து அவர்கள் வழக்கமாக கல்லூரி செல்லும் பாதையில் பயணிக்கும். இதனால் மாணவர்கள் என்னதான் உற்சாகம் அடைந்தாலும் பொதுமக்கள் படும அவதியை வார்த்தைகளால் விவரிக்க இயலாது.

ஆம்புலன்ஸ், பள்ளிக் குழந்தைகள் செல்லும் சாலையில் மாணவர்கள் கத்திக்கொண்டு செல்வது என்பது அவர்களுக்கு சிரமத்தையே ஏற்படுத்தும். இதோடு மட்டுமில்லாமல் பல சமயங்களில் 'பஸ் டே' கொண்டாடும் மாணவர்களுக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டு மோதலில் முடிந்திருக்கின்றன. மகிழ்ச்சியை தாண்டி இது போன்ற கொண்டாட்டங்களில சிரமங்களும் இருக்கவே செய்கின்றன.

பல்வேறு பிரச்சினைகளை கருத்தில் கொண்டு கல்லூரி மாணவர்கள் 'பஸ் டே' கொண்டாட சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. தடையை மீறும் மாணவர்களை கைது செய்யவும் உயர்நீதிமன்றம் தன் உத்தரவில் கூறியுள்ளது.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தடையை மீறி கோவையைச் சேர்ந்த தனியார் கல்லூரி மாணவர்கள், அவினாசி சாலையில் திருப்பூர் செல்லும் தனியார் பேருந்தில் 'பஸ் டே' கொண்டாடிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. பயணிகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் அலங்கரிக்கப்பட்ட பேருந்துக்கு முன்பாக தாரை தப்பட்டைகள் முழங்க ஆட்டம் போட்ட மாணவர்கள், அவினாசி சாலையில் கணியூர் சுங்கச்சாவடி அருகே பேருந்தை நிறுத்தி ஆட்டம் பாட்டத்துடன் பட்டாசுகள் வெடித்து குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

இது குறித்து ஆதாரங்களுடன் புகார் அளிக்கப்பட்டும் போக்குவரத்து துறை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. பஸ்டே கொண்டாட்டங்களுக்கு தடை அமலில் உள்ள நிலையில், பேருந்தில் பஸ்டே கேளிக்கை கொண்டாட்டங்களுக்கு அனுமதி அளித்த ஓட்டுனர், நடத்துனர் மற்றும் பேருந்து உரிமையாளர் மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
ai and smart homes of future