சமூக நீதி தூய்மை பணியாளர்கள் கோவை ஆட்சியர் அலுவலகம் முன் போராட்டம்

சமூக நீதி தூய்மை பணியாளர்கள் கோவை ஆட்சியர் அலுவலகம் முன்  போராட்டம்
X

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் சமூக நீதி தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.

சமூக நீதி தூய்மை பணியாளர்கள் சங்கத்தினர் கோவை ஆட்சியர் அலுவலகம் முன் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.

கோவை மாவட்ட சமூக நீதி தூய்மை பணியாளர்கள் சங்கத்தினர் சுமார் 100க்கும் மேற்பட்டோர் சங்கத்தின் தலைவர் பன்னீர்செல்வம் தலைமையில், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை மாவட்டத்தில் நகராட்சி, மாநகராட்சி, பேரூராட்சி ஊராட்சி அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கு குறைந்தபட்ச கூலியாக 750 ரூபாய் வழங்கிட வேண்டும், தொகுப்பூதிய அடிப்படையில் பணியமர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் பல்வேறு பணிகள் ஒப்பந்த அடிப்படையில் தனியாரிடம் ஒப்படைக்கப்படுவதால் தனியார்மயமாவதை கைவிடக் கோரியும் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அமர்ந்து பதாகைகளை ஏந்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பன்னீர்செல்வம் ஊராட்சி பகுதிகளில் பணி புரியும் பணியாளர்களுக்கு 80 ரூபாய் மட்டுமே கூலியாக வழங்கப்படுவதாகவும் அவர்கள் எட்டு மணி நேரத்திற்கும் மேலாக பணிபுரிவதாகவும் தெரிவித்தார். மேலும் கோவை அரசு மருத்துவமனையில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு கூலியாக 325 ரூபாய் மட்டுமே வழங்கப்படுவதாகவும் ஆனால் அவர்களுக்கு அளிக்கப்பட்ட வேலையை மீறி அனைத்து பணிகளையும் அவர்கள் செய்வதாகவும் அங்கு பணிபுரியும் பணியாளர்களுக்கு கழிவறை குளியலறை உள்ளிட்ட எவ்வித அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லை எனவும் கூறினார்.

மேலும் கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் பல்வேறு ஒப்பந்த பணிகள் தனியாருக்கு வழங்கப்படுவதாகவும் இந்த தனியார்மயமாக்கும் நடவடிக்கைக்கு பலமுறை அதிகாரிகளிடம் மனுக்கள் அளித்தும் நடவடிக்கை எடுப்பதில்லை எனக் கூறினார். எனவே கோவை மாவட்ட ஆட்சியர் தங்களது கோரிக்கைகளுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் காவல்துறையினர் பேச்சு வார்த்தை நடத்தியதை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பிருந்து கலைந்து சென்றனர்.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil