கோவையில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு
குழந்தைகளை வரவேற்ற ஆசிரியர்கள்.
கொரோனா தொற்று பரவல் குறைந்த நிலையில், இன்று முதல் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. கோவை மாவட்டத்தில் 19 மாதங்களுக்கு பின்னர் 1 முதல் 8 ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் இன்று திறக்கப்பட்டது. பள்ளிகளுக்கு வந்த மாணவர்களுக்கு மலர்கள், பலூன்கள், இனிப்புகள் கொடுத்து பள்ளி நிர்வாகத்தினர் வரவேற்றனர். கோவை மாவட்டத்தில் 2064 அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 5.70 லட்சம் மாணவர்கள் இன்று பள்ளிகளுக்கு வருவதால், அதற்கான ஏற்பாடுகளை அந்தந்த பள்ளி நிர்வாகங்கள் செய்து இருந்தன.
கோவை மசக்காளிபாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் பேண்ட் வாத்தியம் முழங்க மாணவர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. சித்தாபுதூர் பள்ளியில் கோவை எம்.பி. பி.ஆர்.நடராஜன் இனிப்புகள் வழங்கி வரவேற்றார்.பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு உடல் வெப்பநிலை சோதிக்கப்பட்டு, கிருமிநாசினி கொடுக்கப்பட்டு கைகள் சுத்தப்படுத்தப்பட்ட பின்னர் வகுப்பறைகளுக்கு அனுமதிக்கப்பட்டனர். வகுப்புகளுக்குச் செல்லும் முன்பாக மாணவர்களுக்கு பரிசு பொருட்களும், இனிப்புகளும் வழங்கப்பட்டது.
சளி, இருமல் போன்ற அறுகுறி இருந்தால் பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் எனவும் பெற்றோர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பள்ளி ஆசிரியர்கள் தெரிவித்தனர். முதல் 15 நாட்களுக்கு ஆடல், பாடல், கதை சொல்லல் உள்ளிட்ட புத்தாக்கப் பயிற்சிகள் மட்டுமே நடத்தப்பட இருப்பதாகவும், அதன் பின்னரே வழக்கமான வகுப்புகள் துவங்கும் எனவும் ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
நீண்ட நாட்களுக்கு பிறகு பள்ளிக்கு வருவது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவிக்கும் குழந்தைகள், தங்களது நண்பர்களை பார்க்க முடிவதாகவும் ஆன்லைன் வகுப்புகளை விட நேரில் வகுப்புகளை கவனிப்பதுதான் தங்களுக்குப் பிடித்திருப்பதாகவும் தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu