பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை: ஆசிரியரின் பாலியல் தொல்லையே காரணம் என குற்றச்சாட்டு

பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை: ஆசிரியரின் பாலியல் தொல்லையே காரணம் என குற்றச்சாட்டு
X

 தற்கொலை செய்து கொண்ட மாணவியின் வீடு.

வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் உள் பக்கமாக தாழிட்ட பொன் தாரணி, மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கோவை கோட்டை மேடு பெருமாள் கோவில் வீதி பகுதியை சேர்ந்தவர் மகுடேஸ்வரன். இவரது 17 வயது மகள் பொன் தாரணி. பொன் தாரணி 11 ம் வகுப்பு வரை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள சின்மயா வித்யாலயா என்ற தனியார் மேல்நிலைப்பள்ளியில் படித்து வந்தார். இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு அப்பள்ளியில் படிக்க விரும்பவில்லை எனக்கூறி பொன்தாரணி, அம்மணியம்மாள் பள்ளிக்கு மாறினார். அந்த பள்ளியில் 12 ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் உள்பக்கமாக தாழிட்ட பொன்தாரணி, மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து உக்கடம் காவல் நிலையத்தில் மாணவியின் பெற்றோர்கள் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

இதனிடையே மாணவி பொன்தாரணி தற்கொலைக்கு பள்ளி ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி என்பவர் அளித்த பாலியல் தொல்லையே காரணம் என உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மாணவியின் உறவினர்கள் கூறுகையில், மிதுன் சக்கரவர்த்தி என்ற ஆசிரியர் தாரணியிடம் போன் எண்ணை வாங்கி சாட் செய்து வந்துள்ளார். ஆசிரியர் என்ற முறையில் தாரணியும் பேசி வந்துள்ளார். கடந்தாண்டு ஏப்ரல் மாதத்தில் தாரணியை பள்ளி ஆடிட்டோரியத்திற்கு வரவழைத்த மிதுன் சக்கரவர்த்தி, மேல் ஆடையை கழற்றி பாலியல் தொல்லை அளித்துள்ளார். இதுகுறித்து பள்ளி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. இதனால் மனமுடைந்த நிலையில் காணப்பட்ட தாரணி தற்கொலை செய்து கொண்டார் எனத் தெரிவித்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!