கோவை பெண்ணிடம் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.18 லட்சம் மோசடி

கோவை மாவட்டம் கோவைப்புதூரை சேர்ந்தவர் ஊர்மிளா (வயது 42). இவர் கோவை சைபர் கிரைம் போலீசில் புகார் ஒன்றினை அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:-
கடந்த சில மாதங்களுக்கு முன்பு எனக்கு உஸ்மா சர்மா என்ற பெயரில் வாட்ஸ் அப்பில் குறுந்தகவல் ஒன்று வந்தது. அந்த நபர் தான் சமூக வலைதள மார்க்கெட்டிங் நிறுவனத்தில் வேலை பார்த்து வருவதாகவும் பகுதி நேர வேலை வாங்கி தருவதாகவும் கூறினார். மேலும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடர்ந்தால் கமிஷன் கிடைக்கும் என்று கூறினார். பிறகு என்னை அவர்களது டெலிகிராம் குழுவில் இணைத்து விட்டார். பின்னர் ஒரு இணையதள லிங்கை அனுப்பி அதில் தனது விவரங்களை பதிவு செய்தால் தான் கமிஷன் கிடைக்கும் என்றார்.
அதனை உண்மை என நம்பிய நானும் அவர் சொன்னது போல் பதிவு செய்தேன். அப்போது முதற்கட்டமாக இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடர்ந்ததற்காக ரூ.210 கமிஷனாக அனுப்பினார். இதையடுத்து நான் ரூ.1000 முதலீடு செய்தேன். அதில் கமிஷன் என கூறி ரூ.1410 எனது வங்கி கணக்குக்கு வந்தது. இதனால் பண ஆசையில் மேலும் ரூ.5000 முதலீடு செய்தேன். எனக்கு ரூ.6420 கமிஷனாக கிடைத்தது. இதையடுத்து சிறிது சிறிதாக மொத்தம் ரூ.18,30,000 வரை முதலீடு செய்தேன். ஆனால் அவர் எனக்கு கமிஷன் தரவில்லை.
எனவே சந்தேகமடைந்த நான் அவரை தொடர்புகொள்ள முயற்சி செய்தேன். ஆனால் அந்த நபரை தொடர்பு கொள்ள முடியவில்லை. மேலும் எனது பணத்தை வங்கி கணக்கில் வரவு வைக்க முடியாததால் நான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தேன். என்னை ஏமாற்றிய நபரை கண்டு பிடித்து எனது பணத்தை மீட்டு தர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இதுகுறித்த புகாரின் பேரில் கோவை சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu