அடகு கடை காரர்களை குறி வைத்து லட்சக்கணக்கில் சுருட்டிய கொள்ளையன் கைது

அடகு கடை காரர்களை குறி வைத்து லட்சக்கணக்கில் சுருட்டிய கொள்ளையன் கைது
X

கைது செய்யப்பட்ட தீபனை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்காக அழைத்து சென்றனர்.

கோவையில் அடகு கடை காரர்களை குறி வைத்து லட்சக்கணக்கில் சுருட்டிய கொள்ளையனை போலீசார் கைது செய்தனர்.

அரசு வங்கியில், தனியார் நிதி நிறுவனங்களில் அடமானம் வைத்த நகையை மீட்க கடன் வழங்குவது அடகு கடைக்காரர்களின் வழக்கம். நம்பிக்கை அடிப்படையில் தெரிந்தவர்களுக்கு மட்டுமே இவ்வாறு கடன் வழங்கினால் எந்த பிரச்னையும் இல்லை.

ஆனால் அதிக லாபத்துக்கு ஆசைப்பட்டு அடகு கடைக்காரர்கள் பலர் முன் பின் அறிமுகம் இல்லாத நபர்களுக்கு கூட தாராளமாக கடன் வழங்குகின்றனர். இப்படி கடன் வழங்கும் அடகு கடைக்காரர்களை குறி வைத்து ஏமாற்றினார் மோசடி பேர்வழி ஒருவர்.

கோவையில் அடுத்தடுத்த சில நாட்களில் அசோக் குமார் என்ற நபர் மூன்று வெவ்வேறு அடகு கடைக்காரர்களை ஒத்தக்கால் மண்டபத்தை சேர்ந்த மணிகண்டன் என்பவரிடம் 3 லட்சம் ரூபாய், ராமநாதபுரத்தை சேர்ந்த மோகன்ராஜ் என்பவரிடம் ஒரு லட்சம் ரூபாய், கிராஸ்கட் ரோட்டை சேர்ந்த பழனிவேல் என்பவரிடம் இருந்து மூன்றரை லட்சம் ரூபாயை அசோக் குமார் என்பவர் ஏமாற்றியதாக புகார் போலீசாரிடம் நகை அடகு கடை உரிமையாளர்கள் புகார் தந்திருக்கின்றனர்.

இணையத்தில் தங்க அடகு , விற்பனை கடை அலைபேசி எண்களை எடுத்து அழைத்து வங்கியில் நகை கடனுக்காக அடகு வைத்திருக்கின்றேன். நீங்கள் பணம் கொடுத்தால் எடுத்து வந்து உங்களிடம் அடகு வைப்பேன் என்று பொய்யான உறுதி கூறி, பணம் வாங்கிக்கொள்வது, முடிந்தால் விற்று தாருங்கள் என்று தெரிவித்து லட்சக்கணக்கில் பணம் பறித்து பின்னர் தலைமறைவாகி விடுவது அந்த மோசடி நபரின் வழக்கம். நகை அடகு வைத்ததற்க்கான வங்கி ரசிதையும் வசிப்பிடத்துக்கான விலாசம் நகை கடைக்காரர்களிடம் தெரிவிக்கவும் நம்ப வைக்கவும் போலியான வங்கி ஆவணம் ரசீது ஆதார் உள்ளிட்டவற்றை அச்சு அசலாக தயாரித்திருக்கின்றான். யாரும் சந்தேகிக்கும் விதத்தில் நடந்து கொள்ளாமல் நகையின் அன்றாட மதிப்பினை அறிந்து அதற்கு ஏற்றவாறு நகை அடகு ரசீதை போலியாகவும் தயார் செய்திருக்கின்றான். நகை அடகு கடைகளை மட்டுமே குறிவைத்து லட்சக்கணக்கில் நவீன வழிப்பறி நடத்தியிருக்கின்றான். அடுத்தடுத்து ஒரே நேரத்தில் மூன்று புகார்கள் மோசடி மன்னன் மீது தரப்பட்டதனால் நவீன வழிப்பறி கொள்ளையனை பிடிக்க உதவி கமிஷனர் மணிகண்டன் மேற்பார்வையில் தனிப்படை அமைத்து கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவிட்டார். தனிப்படை போலீசின் தேடுதல்வேட்டையில் பதுங்கியிருந்த அசோக்குமாரை இன்ஸ்பெக்டர் பரிமளா தேவி, எஸ். ஐ. நாகராஜ் கைது செய்தனர்.

விசாரணையில் அசோக்குமார் கோயமுத்தூரை சேர்ந்தவர் அல்ல என்றும் பொய்யாக கூறி போலி ஆதார் அட்டை அடித்து நவீன மோசடியில் ஈடுபட்டவன் என்பதும் தெரியவந்தது. இவரது இயற்பெயர் தீபன். கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் படித்த பி.டெக். பட்டதாரி என்பது தெரியவந்தது. சிவகாசியில் பட்டாசு ஆலை நடத்தி தொழில் நட்டமான நிலையில் நவீன மோசடியில் இறங்கியது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. அவர் மீது விருதுநகர் மாவட்டத்தில் இதேபோன்ற 5 மோசடி வழக்குகள் நிலுவையில் இருப்பதும் வேறு சில இடங்களிலும் இதேபோன்று மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது.

அசோக்குமார் என்ற பெயரியில் மோசடி அறங்கேற்றிய தீபனை கோர்ட்டில் ஆஜர்படுத்திய போலீசார் மாஜிஸ்திரேட் உத்தரவுபடி சிறையில் அடைத்தனர். நகை அடகு கடை உரிமையாளர்களை குறி வைத்து வழிப்பறியில் ஈடுபட்டிருந்த இவன் பின் புலத்தை போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!