கோவையில் சாலைகளில் வடியாத வெள்ள நீரால் பொதுமக்கள் அவதி

வாலாங்குளத்தின் உபரி நீர் சாக்கடை கால்வாய் வழியாக வெளியேறி வருகிறது.

கோவையில் தொடர் மழை மற்றும் நீர் வரத்து அதிகரிப்பு காரணமாக வாலாங்குளம் நிரம்பியுள்ளது. இதன் உபரி நீர் சாக்கடை கால்வாய் வழியாக வெளியேறி வருகிறது. ராமநாதபுரம், ஒலம்பஸ், 80 அடி சாலை, புலியகுளம் உள்ளிட்ட பகுதிகளில் மழை நீரும், சாக்கடை நீரும் சேர்ந்து சாலைகளில் ஆறு போல ஓடி வருகிறது. நேற்றைய தினம் இந்த வெள்ள நீர் அப்பகுதிகளில் இருந்த வீடுகளுக்குள் புகுந்ததால் பொது மக்கள் சிரமத்திற்கு உள்ளாகினர். இதேபோல சாலைகளில் தேங்கிய வெள்ள நீரால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இந்நிலையில் இன்று இரண்டாவது நாளாக ஒலம்பஸ், இராமநாதபுரம், சவுரிபாளையம், கணேசபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் வெள்ள நீர் ஆறாக ஓடி வருகிறது. வீடுகளுக்குள் புகுந்த வெள்ள நீர் வடியாததால் பொது மக்கள் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். மழை நீர், சாக்கடை நீர் சேர்ந்து தேங்கி இருப்பதால், காலை நேரத்தில் பள்ளிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகளும், வாகனங்களில் வேலைகளுக்கு செல்பவர்களும் சிரமத்திற்கு உள்ளாகினர். சாக்கடை கால்வாய் வழியாக வெளியேறிய குளத்தின் உபரி நீர் சாக்கடை அடைப்பு காரணமாக சாலைகளிலும், வீடுகளிலும் தேங்கியுள்ளதாகவும், சாலைகளில் தேங்கியுள்ள வெள்ள நீரை வெளியேற்ற மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags

Next Story
why is ai important to the future