பொள்ளாச்சி பாலியல் வழக்கு குற்றவாளிகளுக்கு சலுகை அளித்தாக சர்ச்சை

பொள்ளாச்சி பாலியல் வழக்கு குற்றவாளிகளுக்கு சலுகை அளித்தாக சர்ச்சை
X

போலீஸ் வாகனத்தை நிறுத்தி பேசும் உறவினர்கள்.

காவல் துறை வாகனம் நிறுத்தப்பட்டு, குற்றம் சாட்டப்பட்டவர்களின் உறவினர்கள் அவர்களை சந்தித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான திருநாவுக்கரசு, சபரி ராஜன், மணிவண்ணன், வசந்த் குமார் , சதீஷ், பாபு , ஹெரைன் பால், அருளானந்தம், அருண்குமார் ஆகிய 9 பேர் கோவை மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கினை விசாரித்த நீதிபதி நந்தினி தேவி வழக்கு விசாரணையை வரும் 28 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார். மேலும் கடந்த 21ஆம் தேதி குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டதில், விடுபட்ட குற்றப்பத்திரிகை நகல்களின் சில நகல்கள் இன்று 9 பேரிடமும் வழங்கப்பட்டன. பாதிக்கப்பட்ட பெண்கள் நீதிமன்றத்தில் அளித்த, ரகசிய வாக்குமூலத்தின் நகல்கள் கைதான 9 பேருக்கும் வழங்கப்பட்டது. பின்னர், பாலியல் வழக்கின் விசாரணை வரும் 28ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் சேலம் மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்ட குற்றம் சாட்டப்பட்டவர்கள் இருந்த காவல் துறை வாகனம், கோவை சித்ரா விமான நிலையம் அருகே திடீரென நிறுத்தப்பட்டது. இதனையடுத்து, அங்கு காத்திருந்த குற்றம் சாட்டப்பட்டவர்களின் உறவினர்கள் அவர்களை சந்தித்து பேசினர். குறிப்பாக, பாலியல் வழக்கில் முக்கியக் குற்றவாளிகளாக சந்தேகிக்கப்படும், சபரி ராஜன், திருநாவுக்கரசு, மணிவண்ணன், வசந்த் குமார், சதீஷ் ஆகிய 5 பேர் அந்த வாகனத்தில் இருந்தனர். உறவினர்களிடம் அவர்கள் பேசிய பின்னர், அந்த வாகனம் சேலம் மத்திய சிறையை நோக்கி சென்றது. நீதிமன்றத்திலிருந்து சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லும் வழியில் உறவினர்களைப் பார்க்க அனுமதித்தது ஏன் என்றும், எந்த அடிப்படையில் இதுபோன்ற சலுகைகள் அவர்களுக்கு காட்டப்பட்டது என்பதும் மிகப்பெரிய கேள்வியாக எழுந்துள்ளது.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் தங்கள் உறவினர்களை சந்திக்க வேண்டும் என்றால் முறையாக, நீதிமன்றத்தின் முன் அனுமதியைப் பெற வேண்டும். ஆனால் பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை சிறைக்கு அழைத்துச் செல்லும் வழியில் உறவினர்கள் சந்தித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!