7 மாத குழந்தையின் தொண்டையில் சிக்கிய பிளாஸ்டிக்: வெற்றிகரமாக அகற்றிய அரசு மருத்துவர்
குழந்தையின் தொண்டையில் சிக்கி இருந்த பிளாஸ்டிக் பொருள்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள நெகமம் பகுதியைச் சேர்ந்த 7 மாத குழந்தைக்கு திடீரென இருமல் மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சியான பெற்றோர் குழந்தையை தூக்கி கொண்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்குச் சென்றனர். அங்கு சிறுமி அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆஸ்பத்திரியில் குழந்தையை காது, மூக்கு, தொண்டை பிரிவு டாக்டர்கள் பரிசோதனை செய்தனர்.
அப்போது, குழந்தையின் மூச்சு குழாயில் சிறிய அளவிலான பிளாஸ்டிக் பொருள் சிக்கி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து டாக்டர்கள் குழுவினர் குழந்தைக்கு எந்தவித அறுவை சிகிச்சையும் இன்றி பிளாஸ்டிக் பொருளை அகற்ற முடிவு செய்து அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
மூச்சுக்குழாய் உள்நோக்கி கருவி மூலம் அறுவை சிகிச்சை இன்றி குழந்தையின் மூச்சு குழாயில் சிக்கி இருந்த பிளாஸ்டிக் பொருளை அகற்றினர். இதனால் குழந்தையின் உயிர் காப்பாற்றப்பட்டது. தற்போது குழந்தை நல்ல உடல் நலத்துடன் ஆரோக்கியமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சிகிச்சை காது, மூக்கு, தொண்டை பிரிவு டாக்டர் சரவணன் மற்றும் மயக்கவியல் மருத்துவர் கல்யாண சுந்தரம் தலைமையில் நடந்தது. வெற்றிகரமாக சிகிச்சை செய்து குழந்தையின் உயிரை காப்பாற்றிய மருத்துவ குழுவினருக்கு கோவை அரசு ஆஸ்பத்திரி டீன் நிர்மலா பாராட்டு தெரிவித்தார்.
மேலும் குழந்தைகள், பிளாஸ்டிக் போன்ற சிறிய அளவிலான பொருட்களை விழுங்கிய பின் அதனை எடுக்காமல் விட்டு விட்டால் குழந்தைக்கு நுரையீரல் பாதித்து உயிருக்கு ஆபத்து ஏற்படும். எனவே குழந்தைகளுக்கு திடீரென மூச்சு திணறல், இருமல் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என அரசு மருத்துவமனை டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu