கோவையில் 17 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட மத போதகர் கைது

கோவையில் 17 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட மத போதகர் கைது
X

கைது செய்யப்பட்ட பாஸ்டர் ஸ்டீபன்ராஜ்.

கோவையில் 17 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட மத போதகரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கோவையில் 17 வயது சிறுமி தனது தங்கையுடன் பாட்டி வீட்டில் வசித்து வருகிறார். கோவை மலுமிச்சம்பட்டி பகுதியைச் சேர்ந்த மதபோதகர் ஸ்டீபன் ராஜ், சிறுமி உள்ள பகுதியில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து வாரந்தோறும் வெள்ளிக்கிழமை ஜெபம் செய்து வருகிறார். தமிழ்நாடு ,கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் ஊர் ஊராகச் சென்று ஜெபம் செய்து வரும் ஸ்டீபன் ராஜ் நேற்று சிறுமி உள்ள பகுதிக்கு வந்துள்ளார்.

இந்நிலையில் சிறுமியின் பாட்டி நேற்று இரு சிறுமிகளையும் வீட்டிற்குள் வைத்து தாளிட்டு விட்டு கடைக்கு சென்றுள்ளார். இதனை நோட்டமிட்ட ஸ்டீபன்ராஜ் சிறுமியின் வீட்டின் கதவைத் திறந்து வீட்டுக்குள் நுழைந்துள்ளார். சிறுமியின் தங்கையை ஒரு அறையில் வைத்து தாளிட்ட ஸ்டீபன்ராஜ், 17 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். அதிர்ச்சியடைந்த சிறுமி கூச்சலிட்டதால் ஸ்டீபன் ராஜ் அங்கிருந்து தப்பி சென்ற நிலையில், சிறுமி இது குறித்து தனது பாட்டியிடம் தெரிவித்துள்ளார்.

மேலும் இது தொடர்பாக பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் மதபோதகர் ஸ்டீபன் ராஜ் சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது தெரியவந்த நிலையில் ஸ்டீபன்ராஜை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!