என்.டி.சி. மில்களை இயக்க வலியுறுத்தி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
என்.டி.சி. மில் தொழிலாளர்கள் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்.
இந்தியா முழுவதும் உள்ள என்.டி.சி மில்கள் கொரோனா ஊரடங்கு காரணமாக மூடப்பட்டு, தற்போது வரை இயக்கப்படாமல் உள்ளது. மேலும் ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 50 சதவீத ஊதியமும், கடந்த 3 மாதங்களாக முறையாக வழங்கப்படவில்லை என தொழிலாளர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இதையடுத்து நாடு முழுவதும் உள்ள 23 என்.டி.சி மில்களில் பணியாற்றும் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் சேவ் என்.டி.சி மில் என்ற அமைப்பு துவங்கப்பட்டுள்ளது.
இவ்வமைப்பு சார்பில் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த தொழிற்சங்க தலைவர்கள் கலந்து கொண்டு, என்.டி.சி மில்களை உடனே திறக்க வலியுறுத்தியும், தனியார் மயமாக்கும் முயற்சியை கைவிடக்கோரியும் முழக்கங்களை எழுப்பினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவ்வமைப்பின் அகில இந்திய தலைவர் சச்சின் அகார் "என்.டி.சி மில்களை இயக்கும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை எனவும், வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் தொழிலாளர்களின் நலன்களை கருத்தில் கொண்டு அரசு ஆலைகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மில்களை தனியாருக்கு தாரை வார்க்கும் முடிவை கைவிட்டு, மில்களை இயக்க அரசு முன்வராவிட்டால், பிரதமர் மோடியின் அகமதாபாத் இல்லத்தில் வீடு திரும்பா காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளது. கோவை மக்களவை தொகுதி உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் கூறும் போது, கோரிக்கைகளை வலியுறுத்தும் விதமாக வருகிற குடியரசு தினத்தன்று தேசிய கொடி ஏற்றிய பின்பு தொழிலாளர்கள் வீடுகளில் கருப்பு கொடி கட்டியும், மில்களின் கருப்பு கொடி காட்டி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளோம் என தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu