காரில் கதறிய காதல் ஜோடி: காப்பாற்றிய காவலர்: கோவையில் பரபரப்பு

காரில் கதறிய காதல் ஜோடி: காப்பாற்றிய காவலர்: கோவையில் பரபரப்பு
X

சாலையில் கதறிய தம்பதி விக்னேஷ்வரன்-சினேகா.

இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

கோவை மணியகாரம்பாளையம் பகுதியைச் சேர்ந்த விக்னேஸ்வரன் (22) என்பரும், சரவணம்பட்டி பகுதியை சேர்ந்த சினேகா (19) என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதல் விவகாரம் பெண் வீட்டாருக்கு தெரியவந்த நிலையில் இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு இருவரும் திருமணம் செய்து கொண்ட நிலையில் பாதுகாப்பு கேட்டு சரவணம்பட்டி காவல் நிலையத்தில் தஞ்சமடைந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று மாலை பெண் வீட்டார், இருவரையும் சேர்த்து வைப்பதாக கூறி காரில் அழைத்துச் சென்றுள்ளனர். லஷ்மி மில்ஸ் சிக்னல் அருகில் சென்று கொண்டு இருந்த போது, காரில் ஏறிய சிலர் காதல் தம்பதியை மிரட்டி தாக்க முயற்சித்ததாக தெரிகிறது.

இதனால் அச்சத்தில் உறைந்த காதல் தம்பதி, தங்களை கொலை செய்ய முயற்சிப்பதாக கதறியழுது கூச்சல் போட்டு காரில் இருந்து இறங்க முயற்சித்தனர். அங்கிருந்த போக்குவரத்து காவலர் இருவரையும் மீட்டு, பந்தய சாலை காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் காதல் தம்பதி மற்றும் அவர்களை கடத்த முயன்ற பெண்களின் உறவினர்களை காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.

காதல் திருமணம் செய்துகொண்ட தம்பதியை பெண் வீட்டார் கத்தி முனையில் நிறுத்தி கடத்த முயன்றதை வாகன ஓட்டிகள் சிலர் தங்களது செல்போனில் படம் பிடித்து சமூக வலை தளங்களில் பதிவேற்றி உள்ளனர். இந்த காட்சிகள் தற்போது வைரலாகி வருகின்றது.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!