கோவை மாநகராட்சியின் ஆறாவது மேயரானார் கல்பனா ஆனந்தகுமார்

கோவை மாநகராட்சியின் ஆறாவது மேயரானார் கல்பனா ஆனந்தகுமார்
X

 வெற்றி சான்றிதழ் பெற்ற கல்பனா

அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டு பூங்கொத்து கொடுத்து கல்பனாவிற்கு வாழ்த்து தெரிவித்தார்.

கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் பதவிக்கான மறைமுக தேர்தல் நடைபெற்றது. இதில் 3 அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் உட்பட 6 பேர் பங்கேற்கவில்லை. 96 பேர் ஒருமனதாக போட்டியின்றி கல்பனா ஆனந்தகுமாரை மேயராக தேர்வு செய்தனர். இதனால் கோவை மாநகராட்சியின் ஆறாவது மேயர் மற்றும் முதல் பெண் மேயர் என்ற பெருமையை கல்பனா பெற்றார். இதேபோல திமுகவின் முதல் மேயர் என்ற பெருமையையும் அவர் பெற்றார்.

இதையடுத்து கோவை மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா, மேயராக தேர்வு செய்யப்பட்டதற்கான சான்றிதழை கல்பனா ஆனந்தகுமாரிடம் வழங்கினார். இதையடுத்து கல்பனா ஆனந்தகுமார், மேயர் அங்கி அணிந்தபடி வந்து மேயராக பொறுப்பேற்றார்.

அப்போது செங்கோல் ஏந்தியபடி, மேயர் இருக்கையில் அமர வைக்கப்பட்டார். இதில், அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டு பூங்கொத்து கொடுத்து கல்பனாவிற்கு வாழ்த்து தெரிவித்தார். இதையடுத்து திமுக நிர்வாகிகள் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் கல்பனாவிற்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

பின்னர் கோவை மாநகராட்சி அலுவலகத்தில், மேயர் கல்பனா கையெழுத்திட்டு பொறுப்பேற்றுக் கொண்டார். பின்னர், பயணியர் மில் பகுதியில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில் கழிப்பிடம் கட்டுவதற்கான உத்தரவில் மேயர் கல்பனா முதல் கையெழுத்திட்டார்.

இதையடுத்து மேயர் கல்பனா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், . பொதுமக்களை நேரடியாக சந்தித்து கோரிக்கைகளை கேட்பேன். பொது மக்கள் எப்பொழுதும் என்னை சந்தித்து குறைகளை சொல்லலாம். மக்களோடு மக்களாக இருந்து பணியாற்றுவேன். மாநகராட்சியில் 100 வார்டுகளில் தடையின்றி குடிநீர் கிடைக்கவும், தெரு விளக்கு சாலை வசதிகளை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Tags

Next Story
ai healthcare technology