ஜல்லிக்கட்டு போட்டி நடக்குமா? அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்

ஜல்லிக்கட்டு போட்டி நடக்குமா? அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்
X

பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்ச்சியில் பேசிய செந்தில் பாலாஜி.

வருகின்ற 10 ம் தேதிக்குள் 10.78 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு வழங்கப்படும்.

கோவை ராமநாதபுரத்தில் பொங்கல் பரிசு வழங்கும் திட்டத்தை மின்சாரம் மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி துவக்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, வருகின்ற 10ம் தேதிக்குள் 10.78 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு வழங்கப்படும் என அவர் தெரிவித்தார். உயர் அழுத்த மின் கோபுரம் அமைக்கும் விவகாரத்தில் விவசாயிகள் பொதுவான கோரிக்கைகள் மட்டுமே வழங்கியுள்ளனர்‌.

யார் யாருக்கு இழப்பீட்டு தொகை வரவில்லையோ அவர்களுக்கு விரைவாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார். ஏற்கனவே இழப்பீடு தொகை பெற்றவர்கள் அதிகப்படியாக தற்போது வழங்க கோரியுள்ளனர்‌ எனவும், கூடுதல் இழப்பீடு வேண்டுமென்றால் நீதிமன்றத்தை நாடுவது தான் வாடிக்கை எனவும் கூறிய அவர், சில அமைப்புகள் கூடுதல் இழப்பீடு பெற்றுத்தருவதாக தவறாக வழிகாட்டுகின்றனர் எனத் தெரிவித்தார்.

யாருக்கு இழப்பீடு விடுபட்டுள்ளது என்பது தொடர்பான பட்டியலை இதுவரை விவசாயிகள் வழங்கவில்லை எனவும், கிரண்டர் உற்பத்தி செய்யும் அமைப்பினரின் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது எனவும் அவர் தெரிவித்தார். கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த ஆரம்ப கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது எனவும், கோவை மாவட்டத்தில் எத்தனை பேர் கரூர் மாவட்டத்திலிருந்து பார் டெண்டர் விண்ணப்பித்துள்ளார்கள் என கேட்டுவிட்டு பின்னர் என்னிடம் கேள்வி எழுப்பினால் பதில் அளிக்கிறேன் என கூறினார்.

கடந்தாண்டு மொத்தமுள்ள 5 ஆயிரம் கடைகளுக்கு 6400 படிவங்கள் வழங்கப்பட்டது எனவும், இவ்வாண்டு 11 ஆயிரம் படிவங்கள் வழங்கப்பட்டு முறையாக டெண்டர் நடைபெற்றது எனவும் அவர் கூறினார். குறைவாக தொகை பரிந்துரைத்தவர்களுக்கு கிடைக்கவில்லை என்ற வருத்தம் இருக்கும் எனவும், கடந்த ஆட்சியில் 1500 கடைகளுக்கு டெண்டர் விடாமல் முறைகேடாக செயல்பட்டு வந்துள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

விண்ணப்ப படிவம் கிடைக்கவில்லை என யாராவது புகார் சொன்னார்களா? படிவத்தை பெற்றுக் கொள்ளவில்லை என யாராவது சொன்னார்களா எனக் கேட்ட அவர், டெண்டர் திறக்கும் போது யாரும் எதுவும் பேசவில்லை. 10 ஆண்டுகள் என்பதற்காக, அரசின் நிபந்தனையை தளர்த்த முடியாது எனத் தெரிவித்தார். 312 கோடி வருமானம் கிடைத்த இடத்தில் கடந்த ஆண்டு 89 கோடி மட்டுமே வருமானம் கிடைத்தது எனவும், 1551 கடைகளுக்கு டெண்டர் இன்றி பார் நடைபெற்றுள்ளது எனவும் குற்றம்சாட்டிய அவர், அதிக விலைக்கு விற்பனை செய்த 134 பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.

கோவை ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு முறையாக டோக்கன் வழங்கவில்லை என்ற புகார் தொடர்பான கேள்விக்கு, எல்லோருக்கும் டோக்கன் வழங்கினால் ஜல்லிக்கட்டை 2, 3 நாட்கள் நடத்த வேண்டி இருக்கும். ஜல்லிக்கட்டு நடக்குமா என்பதை அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியான பின்னர் தான் முடிவு செய்ய முடியும் என அவர் பதிலளித்தார்.

Tags

Next Story