ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ஜூனியர் வாரண்ட் ஆபீசர் உடலுக்கு மலர் தூவி மரியாதை
திருச்சூர் கொண்டு செல்லப்பட்ட பிரதீப் உடல்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமைத் தளபதி பிபின் ராவத் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். இதில் கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த ஜூனியர் வாரண்ட் ஆபீசர் பிரதீப் ஏ என்பவரும் உயிரிழந்தார். உயிரிழந்த 13 பேரின் உடல்களும், தனி விமானம் மூலம் டில்லி பாலம் விமான நிலையத்திற்கு எடுத்து செல்லப்பட்டது. அங்கு பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உட்பட முக்கிய பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து, 13 பேரின் உடல்களும், இறுதி சடங்கிற்காக சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அதன் படி, பிரதீப்பின் உடல் தனி விமானம் மூலம் டெல்லியிலிருந்து கோவை சூலூர் விமானப்படை தளத்திற்கு கொண்டு வரப்பட்டது. உடலுடன் ஒன்றிய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளிதரனும் உடன் பயணித்தார். கோவை மாவட்ட நிர்வாகம் சார்பில் தெற்கு வருவாய் கோட்டாட்சியர் இளங்கோ, சூலூர் வட்டாட்சியர் சகுந்தலா மணி ஆகியோர் உடலை திருச்சூர் அனுப்ப தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டனர். சூலூர் விமானப்படை தளத்திற்கு வந்த பாலக்காடு மக்களவை தொகுதி உறுப்பினர் பிரதாபன், உடலை திருச்சூர் கொண்டு செல்லும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.
தமிழக கேரள எல்லையான வாளையாறு பகுதியில், கேரள மாநில நில வருவாய்த்துறை அமைச்சர் ராஜன், மின்சாரத்துறை அமைச்சர் கிருஷ்ணன் குட்டி ஆகியோர் உடலை பெற்றுக்கொண்டு திருச்சூர் கொண்டு செல்ல உள்ளனர். அங்கு அவரது உடல் முழு ராணுவ மரியாதையுடன் தகனம் செய்யப்பட உள்ளது. சூலூர் விமானப்படை தளத்திலிருந்து மலர்களால் அலங்கரிப்பட்ட அமரர் ஊர்த்தி கொண்டு வரப்பட்ட பிரதீப்பின் உடலுக்கு அப்பகுதி மக்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். உயிரிழந்த பிரதீப்பிற்கு மனைவி, 7வயது மகன், இரண்டரை வயது மகள் ஆகியோர் உள்ளனர். பிரதீப்பின் தந்தை கடந்த சில நாட்களாகவே உடல் நலக்கோளாறால் பிராணவாயு உதவியுடன் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu