/* */

பசுமைவழிச் சாலைக்கு எதிர்ப்பு: கோவை விவசாய கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்

பசுமைவழிச் சாலை களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை மண்டல விவசாயிகள் கூட்டமைப்பினர், தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

HIGHLIGHTS

பசுமைவழிச் சாலைக்கு எதிர்ப்பு: கோவை விவசாய கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
X

கோவையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கூட்டமைப்பினர். 

கோவை முதல், கரூர் வரை, ஆறு வழி பசுமைவழி சாலை அமைக்க மத்திய - மாநில அரசுகளால் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் காரணமாக அவ்வழியில் உள்ள பல்வேறு பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் நிலங்கள், குடியிருப்புகள் அகற்றப்பட உள்ளன. இதனால் சுமார் 3000 ஏக்கர் விளை நிலங்கள் பாதிக்கப்படும் எனவும் ஆயிரக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரம் பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனவும் விவசாயிகள் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், கோவை மண்டல விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், பசுமைவழி சாலைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு, இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் செல்லமுத்து, கொங்கு மண்டல விவசாயிகள் நலச்சங்க தலைவர் முருகசாமி, கொங்கு மண்டல விவசாயிகள் பாதுகாப்பு குழு ஒருங்கிணைப்பாளர் பழனிச்சாமி, கோவை பாராளுமன்ற உறுப்பினர் பி.ஆர். நடராஜன், தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன் மற்றும் விவசாய சங்கத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு பசுமைவழிச் சாலைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

பின்னர், கொங்கு மண்டல விவசாயிகள் நலச்சங்க தலைவர் முருகசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது: மத்திய மற்றும் மாநில அரசுகளின் இந்த பசுமை வழி சாலை திட்டத்தினால் பல ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாதிக்கப்படுவதாகவும் பல்வேறு கிணறுகள் எடுக்கப்படும் சூழலும் உள்ளதாகவும் இதனால் ஆயிரக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரம் பொது மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றார்.

பின்னர் பேசிய பாராளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், இந்தத் திட்டத்தால் கரூர்- கோவைக்கு 6 கிலோமீட்டர் தூரம் மட்டுமே குறையும் என நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ள நிலையில் வெறும் 6 கிமீ க்காக பல ஆயிரக்கணக்கான விவசாய நிலங்களை அழிப்பது என்பதை ஏற்க முடியாது என்றார். அன்னூர் முதல் சக்தி வரை புதிய பைபாஸ் ரோடு போடப்படும் என அதிகாரிகள் தெரிவித்து வருவதாக கூறிய அவர் அவ்வழிகளில் புதிய மேம்பாலங்கள் கட்டினாலேயே போதுமானது என தெரிவித்தார்.

Updated On: 18 April 2022 12:15 PM GMT

Related News