வீட்டு பொருட்களுடன் ஆட்சியர் அலுவலகத்தில் குடியேற வந்த குடும்பத்தால் பரபரப்பு
தர்ணாவில் ஈடுபட்டவர்களுக்கு பேச்சுவார்த்தை நடத்திய காவலர்
கோவை வடவள்ளி அருகேயுள்ள ஐஓபி காலனி, பாலாஜி நகர் பகுதியைச் சேர்ந்தவர் கருப்புசாமி. 2 சரக்கு ஆட்டோக்களுக்கு சொந்தக்காரரான இவர், அம்மிக்கல் விற்பனை செய்து வருகிறார். இவர் வசித்து வரும் இடம் தொடர்பாக அவரது உடன்பிறந்தவர்களுடன் சொத்துத் தகராறு இருந்து வந்ததாக தெரிகிறது.
இதனிடையே நேற்று சுபநிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள தனது குடும்பத்தினருடன் கருப்புசாமி, காரமடைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய போது, வீட்டிலிருந்த பொருட்களை அவரது சகோதரர் அடித்து உடைத்ததாக கூறப்படுகிறது. மேலும் அவரது குடும்பத்தினரின் ஆதார் அட்டைகள், வாக்காளர் அட்டைகள், ரேசன் அட்டை ஆகியவற்றையும் எரித்ததாக கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சியடைந்த கருப்புசாமி, வீட்டிலிருந்த பொருட்களை தனது ஆட்டோக்களில் ஏற்றிக்கொண்டு, மனைவி லட்சுமி, மகள் அசுவதி, மகன் அஸ்வின் ஆகியோருடன் இன்று ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தார். அப்போது ஆட்சியரின் வாகனம் நிறுத்துமிடத்தில் தனது ஆட்டோவை நிறுத்திய போது, அவரது மனைவி பெட்ரோல் கேனுடன் தீக்குளிக்க முயன்றார். இதனைக்கண்ட ஆட்சியரின் பாதுகாவலர் அவரை தடுத்து நிறுத்தி அவரிடமிருந்த கேனை பறிமுதல் செய்தார்.
இதையடுத்து, ஆட்சியர் அலுவலக வாயிலில் அமர்ந்தபடி, ஆட்சியர் அலுவலகத்தில் குடியேறப்போவதாக கூறி திடீர் தர்ணாவில் ஈடுபட்டார். தகவலறிந்து வந்த அதிகாரிகளும், காவலர்களும் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறி அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதனால் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu