கோவைக்கு வருகை புரிந்த பேரறிவாளனுக்கு உற்சாக வரவேற்பு

கோவைக்கு வருகை புரிந்த பேரறிவாளனுக்கு உற்சாக வரவேற்பு
X

கேக் வெட்டிய பேரறிவாளனின் தாய் அற்புதம் அம்மாள்.

இந்த வழக்கில் மீதமுள்ள 6 பேர் விடுதலைக்காகவும் போராடுவோம் என தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் இராமகிருட்டிணன் தெரிவித்தார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பேரறிவாளன் 30 ஆண்டுகள் கழித்து விடுதலை செய்யப்பட்டுள்ளார். அவரது விடுதலையே தமிழகம் முழுவதும் பல்வேறு பொது மக்கள், கட்சியினர், அமைப்புகள் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள பெரியார் படிப்பகத்திற்கு பேரறிவாளனும், அவரது தாயார் அற்புதம்மாளும் வருகை புரிந்தனர். அவர்களுக்கு தந்தை பெரியார் திராவிடர் கழகம் உட்பட பல்வேறு கட்சியினர் மற்றும் அமைப்புகள் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

அங்கு வருகை புரிந்த பேரறிவாளன், பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் படிப்பகத்தில் அவருக்கு பொன்னாடை அணிவித்து இனிப்புகள் வழங்கி அவரது விடுதலை கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் கலந்து கொண்ட பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் கேக் வெட்டி பேரறிவாளனுக்கு ஊட்டி மகிழ்ந்தார்.

இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள், பேரறிவாளன் விடுதலை என்று கூறுவதை விட மாநில உரிமைகளை மீட்டுள்ளோம் என்று தான் கூறவேண்டும் என தெரிவித்தார். அனைவருக்கும் நன்றி தெரிவிக்கவே இங்கு வந்துள்ளோம் என கூறினார். இதனை அமைதி போராட்டம் என்று தான் கூற வேண்டும் என கூறிய அவர், பேரறிவாளன் சட்டத்தின் மூலம் விடுதலை ஆகியுள்ளார் எனவும் நாம் அனைவரும் அமைதி வழியில் அனைத்தையும் முன்னெடுப்போம் என தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து பேசிய தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் இராமகிருட்டிணன், இந்த தீர்ப்பு வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு. இந்த வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை பெற்று 31 ஆண்டுகளுக்கு பின் விடுதலை பெற்ற பேரறிவாளன் மற்றும் அவருக்காக 31 ஆண்டு காலம் உழைத்த அவரது தாயாருக்கும் கோவைக்கு வருகை புரிந்துள்ளனர். பேரறிவாளனுக்காக பல கட்ட போராட்டங்களை முன்னெடுத்துள்ளோம். அதே போல் இந்த வழக்கில் மீதமுள்ள 6 பேர் விடுதலைக்காகவும் போராடுவோம் என தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து பேசிய பேரறிவாளன், எனது விடுதலைக்காக உதவிய அனைவருக்கும் நன்றி தெரிவிக்க இங்கு வந்துள்ளதாக தெரிவித்தார். இந்நிகழ்வில் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!