தனியார் கல்லூரியில் நடைபெறும் ஆர்எஸ்எஸ் பயிற்சி முகாமை நிறுத்தக்கோரி ஆர்ப்பாட்டம்

தனியார் கல்லூரியில் நடைபெறும் ஆர்எஸ்எஸ் பயிற்சி முகாமை நிறுத்தக்கோரி ஆர்ப்பாட்டம்

பல்வேறு அமைப்பினர் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்.

ஆர்எஸ்எஸ் சின் துணை அமைப்பான ராஸ்டிரிய சேவிகா சமிதி சார்பில் வளரிளம் பெண்களுக்கான பண்பு பயிற்சி முகாம் நடைபெற உள்ளது.

கோவையில் வருகிற 31ம் தேதி ஆர்.எஸ்.எஸ். சின் துணை அமைப்பான ராஸ்டிரிய சேவிகா சமிதி சார்பில் வளரிளம் பெண்களுக்கான பண்பு பயிற்சி முகாம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 13 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் கலந்து கொள்ளலாம் எனவும், 2 நாட்கள் நடைபெறும் பயிற்சிக்காக பெண்கள் சுடிதார் அணிந்து வர வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சி கோவை காளப்பட்டி பகுதியில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளது. இந்த முகாமிற்கு அனுமதியளிக்க கூடாது என வலியுறுத்தி இன்று தந்தை பெரியார் திராவிடர் கழகம் உள்ளிட்ட முற்போக்கு அமைப்புகள் சார்பில் கோவை ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்தனர். அப்போது, முகாமை தடை செய்யக்கோரி, கண்டன முழக்கங்களை எழுப்பி அவர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தந்தை பெரியார் திராவிர் கழக பொதுச்செயலாளர் கு. ராமகிருட்டிணன், ஆர்.எஸ்.எஸ்.யின் துணை அமைப்பான ராஷ்ட்ரிய சேவிகா சம்தி என்கிற இந்துத்துவா அமைப்பின் பயிற்சி முகாம் கோவை தனியார் கல்லூரியில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் மக்களிடையே தொடர்ந்து மதவெறி உணர்வுகளையும், வெறுப்பு அரசியலையும் ராஷ்ட்ர சேவிகா சம்தி அமைப்பு தூண்டி வருகிறது எனவும் குற்றம்சாட்டினார்.

இந்த அமைப்பு 13 வயதுக்கு மேற்பட்ட ஆரோக்கியமான பெண்கள் பங்கேற்கலாம் என்றும், பயிற்சி செய்வதற்கு சுடிதார் கண்டிப்பாக கொண்டு வரவும் என்றும் நிபந்தனை விதித்து இருப்பதாகவும், தமிழக அரசுக்கும், அனைத்து மக்களுக்கும், சிறுபான்மையின மக்களுக்கு எதிராக ஆயுதப் பயிற்சியை மேற்கொள்ள திட்டமிட்டிருப்பது உறுதியாவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

அமைதியான கோவை உருவாகிவிடக்கூடாது, தொடர்ந்து பதற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் இந்த நிகழ்வு நடத்தப்படுவதாக குற்றம்சாட்டிய அவர், இந்நிகழ்ச்சியை உடனே ரத்து செய்ய வேண்டும் எனவும், இல்லையேல் வருகிற 31ம் தேதி கல்லூரியின் முன்பு முற்றுகை போராட்டம் நடத்தப்படும் எனவும் தெரிவித்தார். மேலும் கோவையின் எந்த பகுதியிலும் இக்கூட்டத்தை நடத்தக்கூடாது எனவும் அவர் வலியுறுத்தினார். இந்த நிகழ்வின் போது மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியினர், விடுதலை சிறுத்தைகள், ஆதித்தமிழர் பேரவை, திராவிடர் விடுதலைக் கழகம், மக்கள் அதிகாரம் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் உடனிருந்தனர்.

Tags

Next Story