கோவையில் மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம் : ஆட்சியர் தகவல்
வாலாங்குளத்தில் ஆய்வு மேற்கொண்ட கலெக்டர் மற்றும் அதிகாரிகள்.
கோவை மாவட்டத்திற்கு, கனமழை தொடர்பான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், முக்கிய நீர் நிலைகள், சாலைகளில் மாவட்ட ஆட்சியர் சமீரன், மாவட்ட கண்காணிப்பாளர்கள் தாரஸ் அகமது, வன்னிய பெருமாள் ஆகியோர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். வாலாங்குளத்தில் ஆய்வு மேற்கொண்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் சமீரன் கூறியதாவது:
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தமிழக அரசு சார்பில் இரண்டு கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கண்காணிப்பாளர்களின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது. இன்று மாநகராட்சி பகுதிகளில் உள்ள பெரிய குளங்கள், முக்கிய நீர்நிலைகளில் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.
என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது குறித்து ஆய்வு செய்துள்ளனர். மாநகராட்சி மற்றும் ஊரக பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவ முகாம்களை கண்காணிப்பாளர்கள் பார்வையிட உள்ளனர். வானிலை ஆய்வு மையம் கோவைக்கு ஆரஞ்சு அலர்ட் வழங்கினாலும், எதிர்பார்த்த மழை இல்லை. இருப்பினும் என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. கோவை மாவட்ட காவல்துறை மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
நொய்யல் ஆறு மூலம் தண்ணீர் பெறும் 25 குளங்களில், 23 குளங்கள் 100% தண்ணீர் நிரம்பி உள்ளன. குளங்களில் நிறைந்து வெளியேறும் உபரிநீர், மீண்டும் நொய்யல் ஆற்றில் கலக்க செல்லும் பாதைகளில் உள்ள அடைப்புகள் செய்யப்பட்டுள்ளது. ஆழியாறு மற்றும் மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் இருந்து வரும் நீர், தாழ்வான பகுதிகளில் தேங்க வாய்ப்புள்ளதால், அங்கும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
சித்திரைச்சாவடி அணை, பில்லூர் அணை, கோவை குற்றாலம் போன்ற பகுதிகளில் நீர் வரத்து அதிகமாக உள்ளதால், பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அங்கு குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதோடு, நீர்நிலைகளில் குளிக்கவோ அல்லது செல்பி எடுக்கவும் சென்றால் ஏதேனும் அசம்பாவிதம் நடக்க வாய்ப்பு உள்ளதால் அவர்களை கண்காணிக்கவும் பறக்கும் படை அதிகாரிகள் பணியில் ஈடுபட்டுள்ளதாக, கலெக்டர் சமீரன் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu