கோவை-பழனி இடையே பயணியர் ரயில் 2 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இயக்கம்

கோவை-பழனி இடையே பயணியர் ரயில் 2 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இயக்கம்
X

பயணிகளுக்கு இனிப்பு வழங்கிய வானதி சீனிவாசன்.

ரயிலை கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் வானதி சீனிவாசன் பச்சை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

கொரோனா பெருந்தொற்று பரவலை தடுக்கும் விதமாக நாடு முழுவதும், முன்பதிவு செய்யாமல் பயணிக்கக்கூடிய பயணியர் ரயில்களின் சேவைகள் ரத்து செய்யப்பட்டது. தற்போது கொரோனா பரவல் எண்ணிக்கை குறைந்துள்ளதால், குறிப்பிட்ட சில வழித்தடங்களில் மட்டும் பயணியர் ரயில் சேவைகளை விரைவு ரயில்களாக மாற்றி, அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன்படி கோவை பழனி இடையேயான விரைவு ரயில் சேவை இன்று முதல் மீண்டும் துவங்கியது. கோவை ரயில் நிலையத்திலிருந்து பொள்ளாச்சி வழியாக பழனி வரை இயங்கும் இந்த ரயிலுக்கு கட்டணமாக குறைந்தபட்சமாக 30 ரூபாயும், அதிகபட்சமாக பழனி வரை 55 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது.

மதியம் 2.10 க்கு கோவை ரயில் நிலையத்திலிருந்து கிளம்பி, மாலை 4.40 மணிக்கு பழனிக்கு சென்றடையும். அங்கிருந்து பழனி - மதுரை விரைவு ரயிலாக மாற்றப்பட்டு மாலை 7.40 மணிக்கு மதுரை சென்றடையும். மறுமார்க்கமாக பழனியிலிருந்து காலை 11.15 மணிக்கு கிளம்பி, கோவை ரயில் நிலையத்தை மதியம் 2 மணிக்கு வந்தடையும். சுமார் 2 ஆண்டுகளுக்குப் பிறகு இயக்கப்படுவதால் இந்த இரயிலுக்கு பயணிகளிடையே பெரும் வரவேற்பு இருந்து வருகிறது.

இந்த ரயிலை கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் வானதி சீனிவாசன் பச்சை கொடியசைத்து துவக்கி வைத்ததோடு, பயணிகளுக்கு இனிப்புகளையும் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கோவையிலிருந்து பழனிக்கு செல்லும் இந்த ரயில் மூலம், பொள்ளாச்சி ஆனைமலை மாசாணியம்மன் கோவில், மதுரை மீனாட்சியம்மன் கோவில் ஆகிய வழிபாட்டு தளங்களுக்கும், கொடைக்கானல், வால்பாறை போன்ற சுற்றுலா தளங்களுக்கு குறைந்த செலவில் செல்ல, பொதுமக்களுக்கு உதவும் என தெரிவித்தார்.

இந்த ரயில் சேவையை, பயணிகள் ரயிலாக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பே கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் துவக்கி வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவர், கோவை பொள்ளாச்சி இடையே இரயில் சேவை துவங்கப்பட்டது வரவேற்கத்தக்கது என்றாலும், குறைந்தபட்சம் கட்டணமாக இருந்த 10 ரூபாயை, விரைவு ரயில் என்ற பெயரில் 30 ரூபாயாக உயர்த்தி இருப்பதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!