கோவை மாவட்ட ஆட்சியரிடம் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் வேட்பு மனு தாக்கல்
கோவை நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் வேட்பு மனுத்தாக்கல் செய்தார்.
நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்து வருகின்றனர். கடந்த வாரம் துவங்கி வேட்பு மனுத்தாக்கல் இன்று நிறைவடைந்து உள்ளது.
கோவையில் அதிமுக சார்பில் போட்டியிடும் சிங்கை ராமசந்திரன், நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கலாமணி மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். இந்நிலையில் வேட்பு மனு தாக்கலின் இறுதி நாளான இன்று பாஜக மற்றும் திமுக வேட்பாளர்கள் வேட்பு மனுத் தாக்கல் செய்தனர். கோவை மருதமலை முருகன் கோவிலில் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் வழிபாடு செய்த பின்னர், தேர்தல் பரப்புரையை துவக்கினார். அப்பகுதியில் வீடு வீடாக சென்று துண்டு பிரசுரங்களை வழங்கிய அவர், உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்தார்.
பின்னர் பந்தயசாலை பகுதியில் இருந்து ஊர்வலமாக வந்து கணபதி ராஜ்குமார், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான கிராந்திகுமார் பாடியிடம் வேட்பு மனுத்தாக்கல் செய்தார். அப்போது தொழில் துறை அமைச்சர் டிஆர்பி மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார், “திமுக சார்பில் வேட்பாளராக போட்டியிட நான் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளேன். முதலமைச்சர் செய்துள்ள திட்டங்கள் மற்றும் சாதனைகளை எடுத்து சொல்லி வாக்குகளை சேகரிப்போம். தேர்தல் களம் எங்களுக்கு சாதகமாக உள்ளது. 10 வருடங்களாக ஆட்சியில் உள்ளவர்கள் எதுவும் செய்யவில்லை. லட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்” எனத் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu