கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல கூட்டத்தில் அதிகாரிகளுக்கு அறிவுரை

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல கூட்டத்தில் அதிகாரிகளுக்கு அறிவுரை
மக்கள் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் அளிக்காமல் அதிகாரிகள் அலட்சியத்துடன் செயல்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என கிழக்கு மண்டல கூட்டத்தில் மண்டல தலைவர் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கோவை மாநகராட்சியின் கிழக்கு மண்டல கூட்டம், சிங்காநல்லூரில் உள்ள மண்டல அலுவலகத்தில், மண்டல தலைவர் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக் தலைமையில் நடைபெற்றது. இதில், மாநகராட்சி பகுதியில் நிலவி வரும் சீரற்ற குடிநீர் விநியோகத்தை சீராக்க வேண்டும், குப்பை எடுப்பதில் அலட்சியம் கூடாது என மாமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதைத்தொடர்ந்து பேசிய மண்டல தலைவர் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக், மாநகராட்சியின் கிழக்கு மண்டலத்திற்கு உட்பட்ட பகுதியில் 2 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வினியோகம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். பல அதிகாரிகள் மாமன்ற உறுப்பினர்களின் அழைப்பை எடுப்பதில்லை எனவும் அதிமுக ஆதரவு அதிகாரிகளாகவே உள்ளனர் எனவும் குற்றம்சாட்டிய அவர், அவர்களின் நிலையை மாற்றிக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.

மேலும், மக்களின் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் அளிக்காமல் அதிகாரிகள் அலட்சியத்துடன் செயல்பட்டால், முதலமைச்சரின் கவனத்திற்கு நேரிடையாக கொண்டு சென்று கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார். இந்த கூட்டத்தில், மாமன்ற உறுப்பினர்கள், பொறியாளர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story