கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமாரின் ராஜினாமா ஏற்பு

கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமாரின் ராஜினாமா ஏற்பு
X

கோவை மாநகராட்சி கூட்டம்

மேயர் கல்பனா ராஜினாமா கடிதம் கொடுத்த நிலையில், அது தொடர்பாக கோவை மாநகராட்சி சாதாரண கூட்டம் இன்று நடைபெற்றது.

கோவை மாநகராட்சியின் மேயராக இருந்த கல்பனா ஆனந்தகுமார், கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். உடல் நிலை மற்றும் குடும்ப சூழல் காரணமாக ராஜினாமா செய்வதாக கல்பனா ஆனந்தகுமார், மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரனிடம் ராஜினாமா கடிதம் கொடுத்தார்.

மேயர் கல்பனா ராஜினாமா கடிதம் கொடுத்த நிலையில், அது தொடர்பாக கோவை மாநகராட்சி சாதாரண கூட்டம் இன்று நடைபெற்றது. துணை மேயர் வெற்றிச்செல்வன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன், திமுக, அதிமுக கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் மேயராக இருந்த கல்பனா ஆனந்தகுமாரின் ராஜினாமா, விவாதமின்றி தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.

இதனிடையே மேயராக இருந்த கல்பனா பதவி விலகியதற்கான காரணத்தை தெரியப்படுத்த வேண்டுமென அதிமுக கவுன்சிலர் பிரபாகரன் கேட்டதால், திமுக, அதிமுக கவுன்சிலர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது கடந்த அதிமுக ஆட்சியில் மேயராக இருந்த செ.ம. வேலுசாமி பதவி விலகிய போது காரணத்தை தெரியப்படுத்தவில்லை எனவும், உடல்நிலை மற்றும் குடும்பச் சூழல் காரணமாக கல்பனா ராஜினாமா செய்திருப்பதாகவும் திமுக கவுன்சிலர்கள் தெரிவித்தனர். அதேபோல கல்பனா மேயர் பதவியை மட்டுமே ராஜினாமா செய்திருப்பதாகவும், கவுன்சிலர் பதவியை ராஜினாமா செய்யவில்லை எனவும் துணை மேயர் தெரிவித்தார்.

மாநகராட்சி கூட்டத்திற்கு பின்னர் அதிமுக கவுன்சிலர் பிரபாகரன் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “இன்று நடந்த கூட்டத்தில் மாநகராட்சி திமுக மேயர் கல்பனா ராஜினாமா தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கல்பனா ஆனந்தகுமார் செயலற்ற மேயராக இருந்தார். கோவை மாநகராட்சியில் கடந்த இரண்டரை வருடங்களாக ஊழலை தவிர வேறு எதுவும் நடைபெறவில்லை. கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் போல, முதலமைச்சர் மேயரை ராஜினாமா செய்ய வைத்துள்ளார்.

மாநகராட்சியில் லஞ்ச லாவணியம் கரை புரண்டு ஓடுகிறது. மேயர் நேரடியாக ராஜினாமா கடிதம் தராமல் உதவியாளர் மூலம் தந்துள்ளார். அவர் அந்த பொறுப்பிற்கு மதிப்பு தெரியாதவராக உள்ளார். மேயர் ராஜினாமா தொடர்பான விசாரணை நடத்த வேண்டும். கல்பனா என்னென்ன ஊழல் செய்தார் என்பது குறித்து சிறப்பு தனிக்குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும். மேயர் கல்பனா பதவி விலகியதற்கான காரணத்தை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்” எனத் தெரிவித்தார்.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது