கோவை குண்டு வெடிப்பு வழக்கு: தலைமறைவு குற்றவாளிகளை பிடிக்க 3 தனிப்படை
தலைமறைவாக உள்ளவர்கள்.
கோவையில். 1998ம் ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி, மாநகரின் 11 இடங்களில் நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பில் 58 பேர் உயிரிழந்தனர்; 200க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இது தொடர்பாக அல் உம்மா அமைப்பின் தலைவர் பாஷா, முகமது அன்சாரி உட்பட 168 பேர் மீது வழக்கு தொடரப்பட்ட நிலையில், 14 பேருக்கு கோவை குண்டுவெடிப்பு வழக்குகள் சிறப்பு நீதிமன்றம் தண்டனை வழங்கியது.
இவ்வழக்கில் தொடர்புடைய முஜிபுர் ரகுமான் என்கிற முஜி மற்றும் சாதிக் (எ) ராஜா (எ) டெய்லர் ராஜா (எ) வளர்ந்த ராஜா ஆகிய இருவர், தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்தனர். இவர்கள் மீது மதுரை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் அடுத்தடுத்து கொலை உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டபோதும், அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை.
கடந்த 24 ஆண்டுகளுக்கு முன்பு அவர்களது வீடுகளில் இருந்து கைப்பற்றப்பட்ட புகைப்படங்களை வைத்து போலீசார் தேடுதல் வேட்டை நடத்தி வரும் நிலையில், தற்போது அவர்களை பிடிக்க சிபிசிஐடியின் சிறப்பு புலனாய்வு பிரிவு, கோவை, திருச்சி, மதுரை என மூன்று மாவட்டங்களிலும் தலா ஒரு சிறப்பு படை என 3 தனிப்படைகளை அமைத்துள்ளது.
ஏற்கனவே கேரளா, தெலுங்கானா, ஆந்திரா, கர்னாடகாவில் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டுள்ள நிலையில், தற்போது மீண்டும் இம்மாநிலங்களில் துண்டு பிரசுரங்கள் மற்றும் புகைப்படங்கள் அடங்கிய போஸ்டர்களை ஓட்டியும் விசாரணை நடத்த தனிப்படைகள் முடிவு செய்துள்ளன. இவர்கள் இருவர் குறித்து தகவல் அளித்தால் தலா 2 லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என போலீசார் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu