சென்னை போதை மறுவாழ்வு மைய உரிமையாளர் கோவை நீதிமன்றத்தில் சரண்

சென்னை போதை மறுவாழ்வு மைய உரிமையாளர் கோவை நீதிமன்றத்தில்  சரண்
X
சிகிச்சை பெற்றவர் அடித்துக்கொலை செய்யப்பட்ட வழக்கில் சென்னை போதை மறுவாழ்வு மைய உரிமையாளர் கோவை கோர்ட்டில் சரணடைந்தார்

சிகிச்சை பெற்றவர் அடித்துக்கொலை- சென்னை போதை மறுவாழ்வு மைய உரிமையாளர் கோவை கோர்ட்டில் சரண்

சென்னை ராயப்பேட்டையை சேர்ந்தவர் ராஜ்(45). இவருக்கு திருமணமாகி கலா என்ற மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர். ஆட்டோவுக்கு மேற்கூரை (ரீப்பர்) அமைக்கும் பணி செய்து வந்தார். மதுபோதைக்கு அடிமையானதால் அவரை குடும்பத்தினர் ராயப்பேட்டையில் உள்ள மெட்ராஸ் கேர் மறுவாழ்வு மையம் என்ற போதை மறுவாழ்வு சிகிச்சை மையத்தில் சிகிச்சைக்கு சேர்த்திருந்தனர்.

இந்த மையத்தில் 3 மாதங்கள் தங்கி சிகிச்சை பெற்று கடந்த 2ந் தேதி ராஜ் வீட்டிற்கு வந்தார். இனி அவர் மது அருந்தமாட்டார் என குடும்பத்தினர் நம்பினர். ஆனால் வெளியில் வந்தவுடன் அவர் மது அருந்தினார். இதனால் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து குடும்பத்தினர் அவரை போதை மறுவாழ்வு மையத்துக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் ராஜை மீண்டும் போதை மறுவாழ்வு மையத்துக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் ஒரு நாள் கழித்து அவரது குடும்பத்தினருக்கு ராஜ் இறந்து விட்டதாக தகவல் தெரிவித்தனர். இதை கேட்டு அதிர்ச்சியான அவர்கள் மையத்திற்கு ஓடி வந்து பார்த்தனர்.

அப்போது ராஜ் உடம்பில் காயங்கள் இருந்தது. இதனால் அவரது சாவில் மர்மம் இருப்பதாக அவரது மனைவி கலா சென்னை அண்ணாசாலை போலீசில் புகார் கொடுத்தார்.போலீசார் நடத்திய விசாரணையில், ராஜ் கட்டையால் அடித்து கொல்லப்பட்டது தெரியவந்தது. மேலும் இந்த மறுவாழ்வு மையம் அரசின் அனுமதியில்லாமல் செயல்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து இந்த வழக்கை போலீசார் கொலை வழக்காக மாற்றி மையத்தின் மேலாளரான பெரம்பூரை சேர்ந்த மோகன், ஊழியர்கள் யுவராஜ், செல்வமணி, சதீஷ், கேசவன், பார்த்தசாரதி, சரவணன் உள்பட 7 பேரை கைது செய்தனர். இதையடுத்து போலீசார் தனிப்படை அமைத்து கார்த்திகேயனையும், அவரது மனைவி லோகேஸ்வரியையும் தேடி வந்தனர்.இந்த நிலையில் இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த மெட்ராஸ் கேர் போதை மறுவாழ்வு மையத்தின் உரிமையாளரான கார்த்திகேயன் கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள 4வது நடுவர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதி பிரசாத், அவரை கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து போலீசார் அவரை கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இதுபற்றிய தகவல் சென்னை அண்ணா சாலை போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அண்ணாசாலை தனிப்படை போலீசார் சென்னையில் இருந்து இன்று கோவைக்கு வருகின்றனர்.பின்னர் முறையான வாரண்டு பெற்று போதை மறுவாழ்வு மையத்தின் உரிமையாளரான கார்த்திகேயனை விசாரணைக்காக சென்னைக்கு அழைத்து செல்ல உள்ளனர்.மேலும் தொடர்ந்து தலைமறைவாக உள்ள கார்த்திகேயனின் மனைவி லோகேஸ்வரியை தனிப்படையினர் தேடி வருகிறார்கள்.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது