மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்
பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கிய எம்.பி. பி.ஆர்.நடராசன்
கடந்த ஆண்டு கொண்டு வரப்பட்ட 3 வேளாண் திருத்த சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. டெல்லியில் லட்சக்கணக்கான விவசாயிகள் போராட்டம் நடத்திய நிலையில் அவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்திய சம்பவங்களும் அரங்கேறின. இருப்பினும் போராட்டமானது தொடர்ந்து வந்த நிலையில் அந்த வேளாண் சட்டங்களை திரும்ப பெற உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இது குறித்தான அறிவிப்பை அறிவித்துள்ள பிரதமர் மோடி விவசாயிகள் தங்களது போராட்டத்தை கைவிட்டு வீடு திரும்ப வேண்டும் என்றும், எவ்வளவோ முயற்சித்தும் சில விவசாயிகளுக்கு அந்த 3 வேளாண் சட்டங்கள் குறித்து விளக்க இயலவில்லை எனவும் அறிவித்திருந்தார். பிரதமரின் இந்த அறிவிப்பு ஓராண்டுகளாக போராடி வந்த விவசாயிகளுக்கு கிடைத்த வெற்றி என்று விவசாயிகள் மற்றும் பல்வேறு கட்சியினர் இனிப்பு வழங்கி கொண்டாடி வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக கோவை காந்திபுரம் பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர். நடராஜன் தலைமையில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் பட்டாசு வெடித்தும் கொண்டாடினர்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய நடராஜன், மத்திய அரசு இந்த சட்டத்தை திரும்பப் பெறும்வரை போராட்டம் நடத்திய அனைத்து விவசாயிகளுக்கும் வாழ்த்துக்கள் என்றும் இன்னுயிரை கொடுத்து போராடிய அனைவருக்கும் நாங்கள் தலை வணங்குவதாக தெரிவித்தார். இந்த போராட்டத்தின்போது உயிரிழந்த விவசாயிகளுக்கு நஷ்டஈடு தரவேண்டும் என கோரிக்கையை முன்வைப்பதாகவும் தெரிவித்தார். இதேபோல பொதுப்பணித்துறையில் மீட்டெடுக்கும் போராட்டம் கூடிய விரைவில் நடக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu