கோவையில் கடையின் பூட்டை உடைத்து பொருட்கள் மற்றும் பணம் கொள்ளை
சிசிடிவி கேமராவில் பதிவான நபர்.
கோவை காந்திபுரம் 8வது வீதியில் பிரதாப் என்ற வடமாநிலத்தவர், அம்பே மொபைல் ஆக்சசரீஸ், கணபதி மொபைல்ஸ் ஆகிய பெயர்களில் மொபைல் உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடைகளை நடத்தி வருகிறார். தற்போது அக்கடைகளின் மேல்தளத்தில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. நேற்று இரவு 10 மணியளவில் கடையை பூட்டிவிட்டு ஊழியர்கள் வீட்டிற்கு சென்ற நிலையில் சுமார் 10.30 மணியளவில் கடையின் முன்பு சில வடமாநில தொழிலாளர்கள் அமர்ந்திருப்பதை அப்பகுதியில் கடையை பூட்டிக்கொண்டிருந்தோர் பார்த்துள்ளனர். இந்நிலையில் இன்று காலை கடைக்கு வந்து பார்த்தபோது, 3 ஷட்டர்களில் ஒரு ஷட்டரின் பூட்டு மட்டும் உடைக்கப்பட்டு கடையின் உள்ளே சென்ற மர்ம நபர்கள், கடையிலிருந்த பணம் மற்றும் மொபைல் உதிரிபாகங்களை திருடிச்சென்றது தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த பிரதாப், இதுகுறித்து காட்டூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார். இதையடுத்து அங்கு வந்த காவல்துறையினர் ஆய்வு செய்த போது, ஒரு கடையில் இருந்த சிசிடிவிக்களின் பதிவுகள் அடங்கிய ஹார்ட்டிஸ்கை கொள்ளையர்கள் எடுத்து சென்றது தெரிய வந்தது. மற்றொரு கடையின் ஹார்ட்டிஸ்கை அங்குள்ள பொருட்களின் இடையே மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்த போலீசார், அதில் பதிவாகியுள்ள காட்சிகளை கொண்டும், அருகில் உள்ள கடைகளில் அமைக்கப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக கொண்டும், கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
காட்டூர் சோதனைச்சாவடி சம்பவம் நடந்த இடத்திலிருந்து சில மீட்டர்கள் தூரமே உள்ள நிலையில், மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் நடைபெற்றுள்ள இந்த துணிகர கொள்ளைச் சம்பவம் அப்பகுதி வணிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடையிலிருந்து 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான ரொக்கம் மற்றும் உதிரிபாகங்கள் கொள்ளை போயிருக்கலாம் என கூறப்படும் நிலையில், மொத்த மதிப்பு எவ்வளவு என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu