கோவையில் பாஜக எம்எல்ஏ வானதி ஸ்ரீனிவாசன் எழுதிய நூல் வெளியீடு

கோவையில் பாஜக எம்எல்ஏ  வானதி ஸ்ரீனிவாசன் எழுதிய நூல்  வெளியீடு
X

கோவை பி எஸ் ஜி கலை அறிவியல் கல்லூரி அரங்கில் நடைபெற்ற பாஜக எம்எல்ஏ வானதிசீனிவாசன் எழுதிய நூல் வெளியிட்டு விழாவில்  பேசிய மத்திய அமைச்சர் ஸ்மிருதிஇராணி

தோல்விகளை வெற்றிப் படிக்கட்டுகளாகப் பயன்படுத்தியதை தனது நூலில் குறிப்பிட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணி பேசினார்

பாரதிய ஜனதா கட்சி தேசிய மகளிர் அணி தலைவரும் கோவை தெற்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான வானதி ஸ்ரீனிவாசன் எழுதிய தடையொன்றுமில்லை எனும் புத்தக வெளியீட்டு விழா கோவை பி எஸ் ஜி கலை அறிவியல் கல்லூரி அரங்கில் நடைபெற்றது.

இதில் மத்திய அமைச்சர் ஸ்மிருதிஇராணி மற்றும் பாஜக மூத்த தலைவர்கள் சி.பி.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா,பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் ஜவுளிதுறை சார்ந்த தொழில் அமைப்பினர் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.

விழாவில் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா: பேசியது: பெண்ணுரிமை பற்றி மற்ற கட்சிகள் பேசுவார்கள். ஆனால் 3 சதவீதம் பெண்களுக்கான உரிமை பாஜகவில் மட்டுமே உள்ளது.பட்டியல் சமூகத்திற்காக மூன்று சதவீதம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் தேசிய கட்சி மாற்றுக் கட்சியாக வருவதற்கு மாற்று கருத்து இல்லை என்பதையே இப்புத்தகம் குறிப்பிடுகிறது. தமிழகத்தில் மக்களிடையே தாகம் உள்ளது.

பாஜக மக்கள் மத்தியில் தாக்கம் ஏற்படுத்தி உள்ளது. தடையொன்றுமில்லை என்ற வார்த்தையை வைத்து தனது வாழ்க்கையில் மட்டுமில்லாமல் தமிழகத்திலும் உண்டு என்ற அடிப்படையில் எழுதியுள்ளார் வானதி. இன்றைய இளைஞர்களுக்கு படிக்கின்ற பழக்கம் குறைந்து வருகிறது. கல்கண்டு புத்தகம் பார்த்து கருத்து சொன்னவர்கள் இன்று மீம்ஸ் களைப்பார்த்து விமர்சனம் கூறும் காலம் வந்து விட்டது என்றார் அவர்.

முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேசியது: புத்தகத்தின் தலைப்பு தடையொன்றுமில்லை. ஆனால் நான் அறிந்த வரை முழுக்க முழுக்க தடைகளை கடந்து வந்தவர் வானதி. தடை ஓட்டத்தில் ஓடுபவர் போல் எத்தனையோ சவால்களை அவர் சந்தித்துள்ளார். வானதியின் பிடிவாத குணமே அவரை தாழ்த்தாமல் உயர்த்தும். மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணியும் பிடிவாதக்காரர் தான். ஒரு தேர்தலில் தான் தோல்வியுற்றாலும் பின்னர் அதே தொகுதியில் வெற்றி பெற்றவர் அவர். ஆண்களை விட நான் உயர்ந்தவர் என்ற குணம் படைத்தவர். ஆண்களுக்கு பாதுகாப்பாக துணையாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் படைத்தவர்கள். கமல்ஹாசனை வானதி சீனிவாசன் தொகுதியில் தோற்கடித்தார் என்றால் ஸ்மிருதி இராணி தொலைக்காட்சி விவாதத்தில் கதற விட்டார் என்றார் அவர்.

மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி பேசியது: இந்த புத்தகத்தில் வானதி ஒரு கிராமத்தில் குழந்தையாக வளர்ந்தபோது எதிர்கொண்ட போராட்டங்கள் மற்றும் தோல்விகளை வெற்றியின் படிக்கட்டுகளாகப் பயன்படுத்தியதைப் பற்றி குறிப்பிட்டுள்ளார்.பெண்கள் தாங்கள் கல்வி கற்கும் போது எந்த தொழிலை மேற்கொள்ள வேண்டும் அல்லது இல்லத்தரசிகளாக இருக்க வேண்டும் என்பதை பெண்கள் தான் முடிவு செய்ய வேண்டும். பெண்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் மகளாக, மனைவியாக, தாயாக மதிக்கப்பட வேண்டும். இந்த ஆசீர்வாதங்களுடன் அவர்கள் தங்கள் வாழ்க்கையை அதிகாரத்துடன் வாழ்வார்கள். வானதி சீனிவாசன் எழுதியுள்ள இப்புத்தகத்தின் மூலம் பெண்கள் தங்களுக்கான முன்னேற்றத்தை கண்டடைய முடியும் என்றார் அவர்.

நூலாசிரியர் வானதி சீனிவாசன் தனது ஏற்புரையில், அரசியலில் சாதிக்க தனது பெற்றோரும் , கணவரும் , மகன்களும் முக்கிய காரணம். என்னை நல்வழி படுத்திய முக்கிய தலைவர்கள் மேடையில் அமர்ந்துள்ளார்கள். இது சுயசரிதை கிடையாது. என்னுடைய அனுபவங்களை புத்தகங்களில் வெளியிட்டுள்ளேன். வீட்டில் உள்ள பெண்களும் அரசியலில் சாதிக்க முடியும் என்றால், நாம் அதற்கான நேரத்தை அவர்களுக்கு ஒதுக்க வேண்டும். பாஜக பல்வேறு வாய்ப்புகளும், பொறுப்புகளும் தனக்கு கொடுத்துள்ளனர்.பதவி, பொறுப்பு என்பதை தலைக்கு ஏற்றாமல் மக்களுக்கு பணி செய்ய வேண்டும் என்பதறும் பிரதமர் மோடிதான் சிறந்த உதாரணம் . பல பெண்கள் தங்கள் வாழ்க்கையில் பெரிய உயரங்களை அடைய ஊக்குவிப்பதற்காகவே இந்த புத்தகத்தை எழுதியுள்ளேன் என்றார் வானதிசீனிவாசன்.

Tags

Next Story
ராசிபுரம் அருகே இரு சமூகத்தினர் மோதல்- போலீசார் குவிப்பு..!