கோவை காவலர் பயிற்சி பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்

கோவை காவலர் பயிற்சி பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்
X

காவலர் பயிற்சி பள்ளி.

விமல்ராஜ் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும், முடிந்தால் தன்னை கைது செய்யுமாறும் கூறிவிட்டு இணைப்பை துண்டித்துள்ளார்.

கோவை அவினாசி சாலையில் உள்ள காவலர் பயிற்சி பள்ளி வளாகம் பி.ஆர்.எஸ் வளாகம் என அழைக்கப்படுகிறது. இங்கு, காவலர் பயிற்சி பள்ளி, கவாத்து மைதானம், குதிரையேற்ற பயிற்சி மைதானம், காவலர்களுக்கான குடியிருப்புகள் ஆகியவை அமைந்துள்ளன. முக்கியமான சில வழக்குகளில் குற்றவாளிகளை காவலில் எடுத்து போலீசார், பாதுகாப்பிற்காக இங்குள்ள அலுவலகங்களில் வைத்து விசாரணை நடத்துவது வழக்கம். அந்தவகையில் தற்போது கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக பல்வேறு தரப்பினரிடமும் இங்கு விசாரணை நடைபெற்று வருகிறது. கொடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜ், தனபாலின் ஓட்டுனர் காவகுமார் ஆகியோரிடம் இவ்வளாகத்தில் வைத்து விசாரணை நடைபெற்றிருந்தது.

இந்த வளாகத்தில் அமைந்துள்ள குடியிருப்பில் காவலர் விமல்ராஜ் என்பவர் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு சுமார் 11 மணியளவில் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அழைத்த மர்ம நபர் ஒருவர், விமல்ராஜ் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும், முடிந்தால் தன்னை கைது செய்யுமாறும் கூறிவிட்டு இணைப்பை துண்டித்துள்ளார். இதையடுத்து மோப்ப நாய் பிரிவு போலீசாரும், வெடிகுண்டு நிபுணர்களும், மைதான வளாகத்தில் சோதனை நடத்தினர். ஆனால் வெடிகுண்டுகள் எதுவும் கிடைக்காததால், இது வெறும் புரளி என்பது தெரியவந்தது.

இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியதில், போன் செய்து மிரட்டல் விடுத்தவர் புலியகுளம் பகுதியைச் சேர்ந்த மோகனகாந்தி என்பது தெரியவந்தது. விமல்ராஜின் உறவினரான மோகனகாந்தி, அவர் மீதான குடும்ப முன்விரோதம் காரணமாக மதுபோதையில் இவ்வாறு மிரட்டல் விடுத்தது தெரியவந்தது. இதையடுத்து அவரைப்பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!