பாஜக தலைவர் அண்ணாமலைக்கு பக்குவம் கிடையாது: அமைச்சர் செந்தில் பாலாஜி

பாஜக தலைவர் அண்ணாமலைக்கு பக்குவம் கிடையாது: அமைச்சர் செந்தில் பாலாஜி
X

செயற்குழு கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் நிர்வாகிகள்.

குடிநீர் தேவைகளை பொருத்த வரை இரண்டு நாட்களுக்கு ஒரு முறை நீர் கிடைக்க பணிகள் நடைபெற்று வருவதாக செந்தில் பாலாஜி தெரிவித்தார்.

கோவை நவ இந்தியா அருகே அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் ஒருங்கிணைந்த கோவை மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து இந்த செயற்குழு கூட்டத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியதாவது:

தொழிலில் தமிழகத்தின் தலைநகராக கோவை விளங்க முதல்வர் நடவடிக்கை எடுத்து வருகிறார். விமான நிலைய விரிவாக்கத்திற்க்கு 3 மாதத்தில் நிலம் எடுக்கும் பணி நிறைவடையும். நாடாளுமன்ற தேர்தலை கவனம் வைத்து தொண்டர்கள் செயல்படவேண்டும். உள்ளாட்சியில் பெற்ற வாக்குகளை விட கூடுதல் வாக்குகளைப் பெற வேண்டும்.

சட்டமன்றத் தேர்தலில் ஆளுக்கு ஒரு பூத் எடுத்திருந்தால் கோவையில் சட்டமன்ற உறுப்பினர்களை பெற்றிருப்போம். அணிகள் போட்டிப்போட்டு செயல்பட வேண்டும். கலைஞரின் பிறந்த நாளை மாவட்டம் முழுவதும் திருவிழா கோலமாக நடத்த வேண்டும். மாணவர்களுக்கு நோட்டு புத்தகம் வழங்க வேண்டும். மக்களுக்கு பயனுள்ள நிகழ்வாக நடைபெற வேண்டும் என தெரிவித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:

கலைஞரின் பிறந்த நாளை முன்னிட்டு கோவை மாவட்டத்தில் 400 இடங்களில் சாதனை விளக்கி தெருமுனை கூட்டம் நடத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து இல்லங்களுக்கும் சென்று ஓராண்டு சாதனையை துண்டு பிரசுரமாக கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பத்து சட்டமன்றத் தொகுதியிலும் திராவிட மாடல் பயிற்சி பயிலரங்கம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

கோவையில் சுங்கம் மற்றும் கவுண்டம்பாளையம் பாலங்கள் விரைவில் திறக்கப்படும். குடிநீர் தேவைகளை பொருத்த வரை இரண்டு நாட்களுக்கு ஒரு முறை நீர் கிடைக்க பணிகள் நடைபெற்று வருகிறது. தனியார் பேருந்துகளை ஒழுங்குபடுத்த மாவட்ட ஆட்சியர் தலைமையில் கூட்டம் நடத்தி சரி செய்யப்படும். தனியார் பேருந்துகளில் அதி வேகத்தை குறைக்க ஆய்வு மேற்கொள்ளப்படும்.

மருதமலையில் சிறுத்தை நடமாட்டத்தை பிடிக்க பணிகள் விரைவுபடுத்தபட்டுள்ளது. அண்ணாமலை பத்திரிகையாளர்களை தரக்குறைவாக பேசினார். அண்ணாமலை பொய் சொல்வதற்காகவே பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்துகிறார். அண்ணாமலைக்கு புரிதலும் கிடையாது, புரிந்துகொள்ளும் பக்குவமும் கிடையாது. பத்திரிக்கையாளர்கள் பக்கத்தையும் தொலைக்காட்சி நேரத்தையும் வீணடிக்க வேண்டாம். முதல்வர் மின்சார உற்பத்தி குறித்தும் ஒதுக்கீடு குறித்தும் பேசியுள்ளார். தமிழக வரிகள் வேறு மாநிலங்களுக்கு செல்கிறது. எங்கள் மீது தவறுகள் இருந்து சுட்டிக்காட்டினால் சரி செய்ய தயாராக உள்ளோம்.

கோவை மாவட்டத்தில் மின் இணைப்பே கொடுக்காமல் விவசாயிகளுக்கான இலவச மின்சாரத் திட்டத்தில் மோசடி செய்த சம்பவம். மற்றும் பாதிக்கப்பட்ட விவசாயியின் போராட்டம் தொடர்பான கேள்விக்கு, சமீபத்தில் விவசாயி போராடிய செய்தி தவறான கருத்து. இவை குறித்து விசாரிக்கிறேன் என்றார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!