கோவையில் வங்கி ஊழியர்கள், இரண்டாவது நாளாக ஆர்ப்பாட்டம்

கோவையில் வங்கி ஊழியர்கள், இரண்டாவது நாளாக ஆர்ப்பாட்டம்

வங்கி ஊழியர்கள் போராட்டம்.

வங்கி ஊழியர்கள், இரண்டாவது நாளாக இன்றும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள், இரண்டாவது நாளாக இன்றும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். முதல் நாளில், நாடு முழுவதும் 20 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு பரிவர்த்தனை பாதிக்கப்பட்டுள்ளதாக அனைத்து இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் தெரிவித்துள்ளது. நடப்பு நிதியாண்டில் இரண்டு பொதுத் துறை வங்கிகள் தனியார்மயமாக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். இதற்காக வங்கிகள் சட்டத் திருத்த மசோதாவை, நடப்பு நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து 9 வங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், நாடு தழுவிய அளவில் இரண்டுநாள் வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டது. இதன்படி, நாடு முழுவதும் பொதுத்துறை வங்கிகளைச் சேர்ந்த 9 லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள், தங்களது வேலைநிறுத்தத்தை வியாழக்கிழமை தொடங்கினர். பாரத ஸ்டேட் வங்கி, கனரா வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி உள்ளிட்ட வங்கிக்கிளைகள் மூடப்பட்டன. இந்நிலையில் கோவை ரயில்நிலையம் அருகே உள்ள எஸ் பி ஐ தலைமை அலுவலகம் முன்பு 200 க்கும் மேற்படவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கும் முடிவை மத்திய அரசு கைவிடாவிட்டால், அனைத்து தொழிற்சங்கங்களையும் ஒன்றிணைத்து மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவோம் எனத் தெரிவித்தனர்.

Tags

Next Story