விமானப்படை அதிகாரி பாலியல் வழக்கு: தலைமை தளபதிக்கு தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ்
அமித்தேஷ்.
கோவையில் உள்ள விமானப்படை பயிற்சி மையத்தில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 30 பேர் பயிற்சிக்காக வந்தனர். இந்நிலையில் கடந்த செப்டம்பர் 10 ஆம் தேதி தன்னை லெப்டினல் அமித்தேஷ் ஹர்முக் என்ற விமானப்படை அதிகாரி பாலியல் வன்கொடுமை செய்ததாக, 28 வயதான பெண் அதிகாரி ஒருவர் விமானப்படை பயிற்சி கல்லூரி அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்க தாமதமாகி வந்ததால், பாதிக்கப்பட்ட பெண் அதிகாரி கோவை காவல் துறையிடம் புகார் அளித்தார். மேலும் விமானப்படை மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனையின் போது, இரண்டு விரல் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக தனது புகாரில் தெரிவித்து இருந்தார். இந்த புகாரின் பேரில் அமித்தேஷை அனைத்து மகளிர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
இந்நிலையில் பெண் அதிகாரி பாலியல் வன்கொடுமை தொடர்பாக விமானப்படை தலைமை தளபதிக்கு தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை உறுதி செய்ய தடை செய்யப்பட்ட இரு விரல் சோதனை செய்யப்பட்டதற்கு தேசிய மகளிர் ஆணையம் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த சோதனை உச்ச நீதிமன்ற உத்தரவிற்கும், தனி மனித உரிமைக்கும் எதிரானது எனக்கூறியுள்ள தேசிய மகளிர் ஆணையம், இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu