பரிசு பொருளுடன் மினிஆட்டோ சிறைபிடிப்பு: கோவையில் அதிமுகவினர் போராட்டம்

பரிசு பொருளுடன் மினிஆட்டோ சிறைபிடிப்பு: கோவையில் அதிமுகவினர் போராட்டம்
X

மினி ஆட்டோவில் பறிமுதல் செய்யப்பட்ட ஹாட் பாக்ஸ்கள்.

கோவையில் பரிசு பொருட்கள் ஏற்றி வந்த மினி ஆட்டோ சிறை பிடிக்கப்பட்டது.

கோவை மாநகராட்சிக்குட்பட்ட 80 மற்றும் 81 வது வார்டுகள், குனியமுத்தூர் பகுதிக்குள் வருகிறது. நேற்றிரவு மினி ஆட்டோ ஒன்றில், 3 பெரிய பொட்டலங்கள் எடுத்து செல்லப்படுவதை பார்த்த அப்பகுதி அதிமுகவினர், ஆட்டோவை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது 3 பெட்டிகளிலும் 98 ஹாட்பாக்ஸ்கள் இருப்பது தெரியவந்தது.

ஓட்டுனரிடம் விசாரித்தபோது, உரிய பதில் அளிக்காததால் சந்தேகமடைந்த அவர்கள், இவை வாக்காளர்களுக்கு வழங்கப்படும் பரிசுப்பொருட்கள் எனக்கூறி, காவல் நிலையத்திற்கும், தேர்தல் பறக்கும் படையினருக்கும் தகவல் அளித்தனர். அங்கு வந்த காவல்துறையினர் ஹாட்பாக்ஸ்களை ஏற்றி வந்த ஆட்டோவை, குனியமுத்தூர் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் நள்ளிரவில் பரபரப்பு ஏற்பட்டது.

இதேபோல், சுகுணாபுரம் பகுதியில் வீடு ஒன்றில் பரிசுப்பொருட்களை பதுக்கி வைத்திருப்பதாகக் கூறி, திமுக ஆதரவாளர் கார் ஒன்றை, அதிமுகவின் செய்தி தொடர்பாளர் கல்யாணசுந்தரம் தலைமையில் 10க்கும் மேற்பட்ட அதிமுகவினர் முற்றுகையிட்டனர். தகவலறிந்து வந்த காவல்துறையினர் விசாரணை நடத்த ஏதுவாக, அதிமுகவினர் கலைந்து போக வேண்டும் என கேட்டுக்கொண்டனர். ஆனால் அதிமுகவினர் தொடர்ந்து முற்றுகை செய்ததால், அனைவரையும் கைது செய்தனர்.

Tags

Next Story