தொற்று பரவலை கட்டுப்படுத்த கோவை கலெக்டரிடம் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மனு

கோவை கலெக்டரிடம் மனு அளித்த அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள்.
கோவை மாவட்டத்தில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வலியுறுத்தி கோவை மாவட்டத்தில் உள்ள அதிமுக கூட்டணியைச் சேர்ந்த 10 சட்டமன்ற உறுப்பினர்கள் இணைந்து மாவட்ட ஆட்சியரிடம் சமீரனிடம் மனு அளித்தனர். பின்னர், முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசியதாவது:
தற்போது நோய்த்தொற்று பரிசோதனை முடிவுகள் உடனடியாக கிடைப்பதில்லை. கிராமப் பகுதிகளிலும், பேருந்துகளிலும் கிருமிநாசினி தெளிப்பதை மாவட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும். அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கூடுதல் கொரோனா வார்டுகள் அமைத்து ஆக்சிஜன் படுக்கைகளை உயர்த்த நடவடிக்கை வேண்டும். மருந்துகள் தட்டுப்பாடின்றி கிடைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் காலியாக உள்ள படுக்கை விவரங்களை மக்களுக்கு தெரிவிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
மாவட்டத்தில் உள்ள பெரிய தொழிற்சாலைகள் மற்றும் நூற்பாலைகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கு, ஆர்.டிபி.சி.ஆர் பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு, தொழிற்சாலை நிர்வாகங்களும் போதிய ஒத்துழைப்பு வழங்க வேண்டும். மாவட்ட எல்லைகளில் வாகனங்களை சரியான முறையில் ஆய்வு செய்த பின்னரே அனுமதிக்க வேண்டும். தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கு அதிகமாக வசூலிப்பதை தடுக்க கண்காணிப்பு குழு அமைத்து கண்காணிக்க வேண்டும்.
வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனை பரிசோதனை செய்வதை உறுதி செய்வதுடன், அவர்களை ஒரு வார காலத்துக்கு தனிமைப்படுத்தி வைக்க வேண்டும். கோவை திருப்பூர் மாவட்டங்களில் கூலி உயர்வு கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விசைத்தறி உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களது கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். நோய்த்தொற்று பரவாமல் கட்டுப்படுத்த இதுவரை போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்ற ஆதங்கத்தில் தற்போது மனு அளித்துள்ளோம் என்றார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu