பாலியல் வன்கொடுமை, கொலை வழக்கில் கைதானவர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை
முத்துக்குமார்.
கோவை சிவானந்தபுரம் பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமி, அப்பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் 11 ம் தேதி காணாமல் போனார். இதனைத் தொடர்ந்து தனது மகளை காணவில்லை என அவரது தாய் ராமநாதபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து மாணவியை தீவிரமாக தேடி வந்தனர். இதனிடையே மாணவியின் வீட்டிற்கு அருகே இருக்கக்கூடிய முட்புதர் ஒன்றில் கை கால்கள், கழுத்துடன் சேர்த்து கட்டப்பட்ட நிலையில், மூட்டையில் பெண் சடலம் கிடப்பது தெரியவந்தது. காவல் துறையினர் நடத்திய விசாரணையில் அது மாயமான சிறுமியின் உடல் என்பது தெரியவந்தது.
இதை தொடர்ந்து சடலத்தை மீட்ட காவல் துறையினர் உடற்கூராய்விற்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மாணவியை கொலை செய்தது யார், எதற்காக கொலை செய்தனர் என்பது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்தநிலையில் மாணவி கொலை வழக்கில் அவரது குடும்ப நண்பரான முத்துக்குமார் என்பரை காவல் துறையினர் கைது செய்தனர். காவல் துறையினர் நடத்திய விசாரணையில் மாணவியின் தாயாருக்கும், முத்துக்குமாருக்கும் நகை, பணம் கொடுக்கல் வாங்கல் தகராறு இருந்துள்ளது. இந்த நகை, பணத்தை திரும்ப கொடுக்க முடியாததால் மாணவியை கொலை செய்து விட்டு, வேறொரு நபருடன் உடன் சென்றதாக நாடகமாட திட்டமிட்டது தெரியவந்தது.
இதையடுத்து முத்துக்குமார் மீது ஆதாயக்கொலை உள்ளிட்ட 3 பிரிவுகளில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்ததை அடுத்து முத்துக்குமார் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் சிறையில் உள்ள முத்துக்குமார் மீது குண்டர் சட்டத்தில் தடுப்புக் காவலில் அடைக்க கோவை மாநகர காவல் ஆணையாளர் பிரதீப் குமார் உத்தரவிட்டார். இதற்கான உத்தரவினை சிறையில் உள்ள முத்துக்குமாரிடம் காவல் துறையினர் வழங்கினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu