கோவை செட்டிபாளையம் அருகே 1 டன் குட்கா பறிமுதல்: ராஜஸ்தான் இளைஞர் கைது

கோவை செட்டிபாளையம் அருகே மூதாட்டி ஒருவர் வீட்டில் ஒரு டன் குட்கா பொருட்களை பதுக்கி வைத்த ராஜஸ்தான் இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
கோவை செட்டிபாளையம் அருகே மூதாட்டி ஒருவர் வீட்டில், மளிகை பொருள் எனக் கூறி ஒரு டன் குட்கா பொருட்களை பதுக்கி வைத்த ராஜஸ்தான் இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
தமிழகம் முழுவதும் டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவின்பேரில் ஆபரேஷன் 2.0 என்ற பெயரில் கஞ்சா மற்றும் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்யும் கும்பல்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் 28 முதல் ஏப்ரல் 17 வரை 1,687 கஞ்சா வழக்கங்களும், 4,953 குட்கா வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதே போல் நேற்று கோவை சூலூர் பகுதியில் கண்டெய்னரில் வைத்துக் கொண்டு வரப்பட்ட சுமார் 500 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்நிலையில் மாவட்ட எஸ்பி பத்ரிநாராயணன் உத்தரவின்பேரில் கோவை செட்டிபாளையம் பகுதியில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பெரியகுயிலி என்ற இடத்தில் மூதாட்டி ஒருவர் வீட்டில் சுமார் ஒரு டன் அளவிற்கு தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருந்தது கண்டறியப்பட்டது. மூதாட்டியிடம் விசாரித்தபோது ராஜஸ்தானை சேர்ந்த இளைஞர் ஒருவர் மளிகை பொருட்களை வைப்பதாக கூறி குட்கா பொருட்களை வைத்தது தெரியவந்தது. இதையடுத்து ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ரமேஷ்குமார் (23) என்பவரை போலீசார் மடக்கிப் பிடித்தனர்.
அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் வட மாநிலங்களில் இருந்து குட்கா பொருட்களை கடத்தி வந்து சில்லரை முறையில் விற்பனை செய்ய பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த ஒரு டன் குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் இதேபோல் கோவையில் குடோன்களில் குட்கா பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu