விரைவில் கோவை பெங்களூரு வந்தே பாரத் ரயில் சேவை
வந்தே பாரத் ரயில் - கோப்புப்படம்
வந்தே பாரத் ரயில்கள் ரயில் பயணிகள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளன. தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு விரைவாக சென்று விடுவதால் பயணிகளும் பெரும்பாலும் இந்த ரயிலில் பயணிக்க விரும்புகின்றனர்.
கோவையில் இருந்து முதலில் சென்னைக்கு வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கியது. இந்த ரயில் சேவை தொடங்கியதும் பயணிகளும், தொழில்முனைவோரும் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்.
மற்ற ரயில்களை விட அதிவேகமாக சென்று விடுவதால், தங்களின் பயண நேரம் மிச்சமாவதுடன், செல்ல வேண்டிய நேரத்திற்கும் சென்றுவிடுவதால் பயணிகள் மத்தியிலும் மிகுந்த வரவேற்பை பெற்றது.
கோவையில் இருந்து பெங்களூருவுக்கு அதிகளவில் ரயில்கள் கிடையாது. எர்ணாகுளம் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் உள்பட சில ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. தொழில் நகரமான கோவையில் இருந்து மற்றொரு தொழில் நகரான கர்நாடக மாநிலம் பெங்களூருவுக்கு கோவையை சேர்ந்த தொழில் முனைவோர்கள், ஐ.டி. நிறுவனங்களில் பணியாற்றுவதற்கு இளைஞர்களும் அதிகளவில் செல்கின்றனர்.
போதுமான அளவு ரயில் இல்லாததால் இவர்கள் சிரமம் அடைந்தனர். கோவை-பெங்களூரு இடையே ரயில்களை அதிகரிக்க வேண்டும் எனவும், கோவை-சென்னை இடையே இயக்கப்படுவது போன்று கோவை-பெங்களூரு இடையேயும் வந்தே பாரத் ரயில் சேவை தொடங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சேலம் கோட்டத்துக்கு, 8 பெட்டிகள் கொண்ட ரேக் வந்துள்ளது. இதனால் கோவை-பெங்களூரு இடையே வந்தே பாரத் ரயில் சேவை விரைவில் தொடங்கும் என தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது இந்த மாத இறுதி அல்லது புத்தாண்டின் தொடக்கத்தில் இருந்து வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கும் எனவும், இதற்கு ரயில்வே நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. விரைவில் இதற்கான முறையான அறிவிப்பு வெளிவரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
அப்படி இயக்கும் பட்சத்தில் தொழில்நுட்ப மையமான பெங்களூரு மற்றும் கோவை ஆகியவற்றை இணைப்பதுடன், கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டை நேரடியாக இணைக்கும் 2-வது வந்தே பாரத் ரயில் சேவையாக இது மாறும். இந்த தகவல் கேட்டு ரயில் பயணிகள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
கோவை-பெங்களூரு இடையே சேலம்-ஜோலார்பேட்டை-குப்பம் வழியாக ஒரு தடமும், தர்மபுரி-ஓசூர் வழியாக ஒரு வழித்தடமும் உள்ளது. இவ்விரு வழித்தடங்களில் ஓசூர் வழித்தடம் குறைவான தொலைவை கொண்டிருந்தாலும் ஒற்றை ரயில் பாதை மட்டுமே உள்ளது.
ஜோலார்பேட்டை வழித்தடம் இரட்டை ரயில் பாதை கொண்டுள்ளதால் இந்த வழித்தடத்தில் வந்தே பாரத் ரயிலை இயக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. கோவையில் இருந்து பெங்களூரு 385 கி.மீ தூரத்தில் உள்ளது. கோவையில் இருந்து சாதாரணமாக ரயிலில் செல்ல வேண்டும் என்றால், 7 முதல் 8 மணி நேரம் வரை ஆகிறது.
வந்தே பாரத் ரயில் இயக்கப்படும் பட்சத்தில் அந்த ரயில் 110 கி.மீ முதல் 130 கி.மீ வேகத்திற்கு இயக்கப்படும் என்பதால், பெங்களூருவுக்கு 5 மணி நேரத்தில் சென்று விடலாம்.
வழியில் திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu