முதலமைச்சர் ஸ்டாலின் வருகை: கோவையில் பாதுகாப்பு பணியில் 2 ஆயிரம் காவல்துறையினர்

முதலமைச்சர் ஸ்டாலின் வருகை: கோவையில் பாதுகாப்பு பணியில் 2 ஆயிரம் காவல்துறையினர்
X

மக்களுடன் முதல்வர் திட்ட தொடக்க விழா  

கோவையில் மக்களுடன் முதல்வர் என்ற புதிய திட்டம் தொடங்கப்பட உள்ளநிலையில் ஈரோடு, திருப்பூர் மாவட்ட காவல்துறையினரும் இணைந்து பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள உள்ளனர்.

தி.மு.க. அரசு பொறுப்பேற்றது முதல் மக்கள் நலப்பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது. அதன் அடிப்படையில் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களுக்கு விரைவில் தீர்வு காணும் வகையில் மக்களுடன் முதல்வர் என்ற புதிய திட்டம் தொடங்கப்பட உள்ளது.

இந்த புதிய திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் நாளை 18ம் தேதி கோவையில் தொடங்கி வைக்கிறார். கோவை எஸ்.என்.ஆர். கல்லூரி அரங்கத்தில் காலை 9.30 மணிக்கு நடக்கும் விழாவில் பங்கேற்று முதலமைச்சர் ஸ்டாலின் திட்டத்தை தொடங்கி வைக்கிறார். பின்னர் அவர் பொதுமக்களிடம் மனுக்களை வாங்குகிறார்.

கோவையில் இந்த திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்த பின்னர் மாநிலம் முழுவதும் இந்த திட்டம் செயல்பாட்டு வரும். மக்களிடம் இருந்து வாங்கப்படும் மனுக்கள் மீது 30 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இந்த நிகழ்ச்சி முடிந்ததும் முதலமைச்சர் ஸ்டாலின் கோவை காந்திபுரத்தில் செம்மொழி பூங்கா அமைக்கப்பட உள்ள மைதானத்துக்கு செல்கிறார். அங்கு செம்மொழி பூங்காவுக்கான அடிக்கல் நாட்டை நாட்டி பணிகளை தொடங்கி வைக்கிறார். இந்த விழாவில் அவர் 10 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கி பேசுகிறார்.

இந்த விழாவில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு நாளை காலை 9.20 மணிக்கு கோவை வருகிறார். முதலமைச்சர் வருகையை முன்னிட்டு தி.மு.க.வினர் உற்சாகம் அடைந்துள்ளனர். அவர் வந்து செல்லும் இடங்களில் திரளாக கூடி நின்று வரவேற்பு அளிக்க முடிவு செய்துள்ளனர்.

மேலும் செம்மொழி பூங்கா நடைபெறும் மைதானத்தில் 10 ஆயிரம் பேர் அமரும் வகையில் பிரமாண்ட பந்தல் மற்றும் மேடை அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. முதலமைச்சர் ஸ்டாலின் வருகையை முன்னிட்டு கோவையில் 2 ஆயிரம் காவல்துறையினர்பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். கோவை காவல்துறையினருடன் நீலகிரி, திருப்பூர், ஈரோடு மாவட்ட காவல்துறையினரும் இணைந்து பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள உள்ளனர்.

Tags

Next Story